குறுந்தொகை


xviii


உதவி சென்னைச் சர்வகலாசாலையாராற் கிடைக்கும்படி செய்வித்தார்கள். அவர்களுடைய நன்முயற்சியையும் தமிழ்ப் பாஷாபிமானத்தையும் மிகவும் பாராட்டுகின்றேன். சர்வகலாசாலையார் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பொருளுதவி செய்வதாகத் தீர்மானித்து ஐந்நூறு ரூபாய் முதலில் கொடுத்து உதவினார்கள். அவர்களுடைய ஆதரவின்றேல் இப்பதிப்பு இப்பொழுது வெளிவந்திராது. இவ்வளவு வருஷங்களாக நான் வெளியிட்டு வரும் நூல் பதிப்புகளுக்கு இதைப் போன்ற பேருதவி கிடைத்ததில்லை என்பதைத் தமிழ் நாட்டினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  
பதிப்பு

    குறுந்தொகைச் செய்யுட்களுக்கு உரை எழுதுகையில் பிற சங்க நூற் செய்யுள் போக்கையும் இலக்கண இலக்கியங்களில் உரையாசிரியர்கள் புலப்படுத்திச் செல்லும் மரபுகளையும் இயன்ற வரையில் உணர்ந்து எழுதலானேன். உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூலில் இருந்து மேற்கோள் காட்டும் செய்யுட்களுக்குச் சில இடங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். அவை எனக்குப் பெருந்துணையாக இருந்தன.

    இப்பதிப்பில் நான் மேற்கொண்ட சில முறைகளை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

    1. கூற்று; ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். திணைப் பெயரைத் தலைப்பிலிடுதல் அகநானூற்றிற் கண்டதாயினும் பொருளில் கருத்துச் செல்வதற்கு இம்முறை தக்கதென்று தோற்றியது. அன்றியும், தொல்காப்பியத்தில் கூற்று வகையாகச் சூத்திரங்கள் வகுக்கப்பட்டிருத்தலும் இங்ஙனம் அமைக்கும் கருத்தை உண்டாக்கியது. சில செய்யுட்களில் இரண்டு பழைய கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் முதற் கருத்தின்படியே கூற்று அமைக்கப்பட்டது.

    2. கூற்று விளக்கம்: இது, பழைய கருத்தையும் செய்யுட் பொருளையும் இணைத்துச் சுருக்கமாக வரையப்பட்டது. இரண்டு கருத்துள்ள இடங்களில் முதற் கருத்துக்கே இவ்விளக்கம் எழுதப்பட்டது .

    3. மூலம்: ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பொருட் சிறப்புடையபாடங்களையே கொடுத்திருக்கிறேன்.

    4. பிரதி பேதம்: ஏட்டுச் சுவடிகளாலும், உரையாசிரியர்கள் உரைகளில் காட்டிய மேற்கோள் பகுதிகளாலும் தெரிந்த பாடங்களுள் முக்கியமானவை அடிக்குறிப்பில் காட்டப்பெற்றன.