குறுந்தொகை


xx


பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி என்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன.

    11. மேற்கோளாட்சி: இலக்கண இலக்கியங்களின் உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூற் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் காட்டிய இடங்கள் அடிவரிசைப்படி வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவை தெரிந்த வரையில் உரையாசிரியர்களின் காலமுறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் உரையாசிரியர்களுடைய கருத்துக்கள் அடிக்குறிப்பில் விளக்கப்பட்டன.

    12. ஒப்புமைப் பகுதி: இந்நூற் செய்யுட்களின் சொற் பொருளோடு ஒப்புமையை உடைய பிறநூற் செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் ஒப்புமைப் பகுதியென்னும் தலைப்பில் காட்டப்பட்டன. இதில் பெரும்பாலும் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சிந்தாமணி என்னும் நூல்களின் பகுதிகளே காணப்படும். கருத்தை நன்கு விளக்குவனவாகிய பிற்காலத்து நூற்பகுதிகள் சிறுபான்மையாகவே இருக்கும். இவ்வொப்புமைப் பகுதி சங்க நூற்பொருள்களை ஆராய்வாருக்குப் பெரிதும் பயன்படும். பாடங்களை நிச்சயம் செய்வதற்கு இவ்வொப்புமைப் பகுதிகள் சிலவிடங்களில் உதவின. இதில் காட்டப்பட்ட செய்யுட்பகுதி குறுந்தொகைச் செய்யுளை இயற்றிய புலவரால் பாடப்பெற்றதாக இருப்பின் அங்கே உடுக்குறியிட்டுக் கீழ்க்குறிப்பில் இன்னார் பாட்டென்று காட்டப்பட்டுள்ளது.

    நூலின் மூலமும் உரையும் அடங்கிய பகுதிகள் மேலே கண்ட முறையில் வகைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டன. நூலிற்கு அங்கமாகச் செய்யுள் முதற்குறிப்பகராதியும், அரும்பத முதலியவற்றின் அகராதியும் நூலின் பின்னே சேர்க்கப்பட்டன.

    இம் முகவுரையின் பின்னே நூல் ஆராய்ச்சியும் ஆசிரியர் பெயர் அகராதியும், பாட பேதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாராய்ச்சியில் இந்நூலால் அறிந்த பலவகைச் செய்திகளையும் பண்டைக் காலத்துத் தமிழ் மரபுகளையும் வேறு பலவற்றையும் காணலாம். இந்நூல் செய்யுட்களைப் பாடிய புலவர்களின் சரித்திரத்தைப் புறநானூறு முதலிய பதிப்புக்களில் எழுதி இருப்பது போல எழுத எண்ணி இருந்தேன். அப் பதிப்புக்களில் எழுதிய பிறகு நான் செய்துவந்த ஆராய்ச்சியினால் தெரிந்த செய்திகள் பல. அவற்றையும் அமைத்துப் புலவர் சரித்திரங்களைத் தனியே வெளியிட எண்ணியிருத்தலின் இந்நூலில் ஆசிரியர் வரலாறுகளை எழுதாமல், அவர்கள் பெயர்களையும் அவர்கள் இயற்றிய செய்யுள் எண்களையும் மாத்திரம் காட்டியிருக்கின்றேன்.

    முதலில் நான் கருதியபடி இல்லாமல் பல புதிய விஷயங்களைச் சேர்க்க நேர்ந்தமையின் எதிர் பார்த்ததைவிட அதிக காலம் இப்பதிப்புக்கு ஆயிற்று.