குறுந்தொகை


xxii


நூலாராய்ச்சி


  
முன்னுரை

     சங்கமருவிய நூல்களின் சொற்பொருட் போக்கிற்கும் பிற்கால நூல்களின் போக்கிற்கும் பல வகையில் வேற்றுமை உண்டு. பழைய காலத்தில் நல்லிசைப் புலவர்கள் அமைத்த புலனெறி வழக்கத்தில் பலவகை மரபுகள் பிற்காலத்தில் வழக்கொழிந்தன. பிற்காலத்தாருடைய நூல்களில் பல புதிய அமைப்புக்கள் காணப்படுகின்றன. நாளடைவில் உலகத்தில் மக்களின் நடை, உடை, பாவனைகள் வேறுபடுதல் போலவே நூல்களின் நடை முதலியனவும் வேறுபடுதல் இயல்பே ஆகும்.

    சங்கச் செய்யுட்களிலே சில வரையறைகள் உண்டு. இன்ன பொருளை இன்னவாறு அமைக்க வேண்டும் என்ற மரபு பிறழாமல் புலவர்கள் செய்யுட்களை இயற்றினர். அங்ஙனம் அச்செய்யுட்கள் வரையறைக்குள் அடங்கினும் அவர்களிடைய மனோபாவமும் அதனை வெளியிடும் முறையும் சொற்பொருள் செறிவும் தனிச் சிறப்போடு விரிந்து விளங்குகின்றன. இயற்கையோடு பழகி இயற்கை அழகில் ஈடுபட்டு அவ்வியற்கையின் பலவகைக் கோலங்களைச் சொற் சித்திரங்களால் உருப்படுத்திக் காட்டும் அவர்களுடைய பேரறிவின் திறம் யாவரும் வியத்தற்குரியது.

    புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும் மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் மிகவும் சிறந்தது. இவ்வகை ஆற்றலை உடைய கவிஞர்களே அறிஞர்களுடைய பெருமதிப்பை அடைகிறார்கள்.

    உலகிலுள்ள பொருள்களைக் 1காட்சிப்பொருள் கருத்துப்பொருள் என இருபெரும் பிரிவாகப் பிரித்துக் கூறுவர். காட்சிப் பொருளாவன ஐம்பொறி உணர்விற்கு உட்பட்டவை. கருத்துப் பொருளாவன மன உணர்வால் அறியப்படுவன. தம் செய்யுட்களைப் படிப்பவர்களுடைய அகக்கண்ணின் முன் இவ்விருவகைப் பொருள்களையும் தோற்றச் செய்யும் ஆற்றல் சங்க காலத்துப் பெருங்கவிஞர்கள்பால் குறைவற நிரம்பி இருந்தது. இயற்கைப் பொருள்களின் இயல்புகளை அவர்கள் செய்யுளில் பரக்கக் காணலாம்; அன்பு, வீரம் முதலிய பண்புகளை வெளிப்படுத்தும் செய்யுட்கள் பல. கருத்துப் பொருளாகிய அன்பின் வழி நிகழும் பலவகை நிகழ்ச்சிகளைக் கூறும் அகப் பொருள், அவர்களுடைய கவி மலரும சோலை. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் சங்க நூல்களுள் அகப்பொருள் பற்றியனவே அதிகமானவை.

  
 தொல். அகத். 1, ந. 
காட்சியென்பது தலைமை பற்றி ஐம்பொறி
உணர்வையும் குறித்து நின்றது.