ஒத்த அன்பால் ஒரு தலைவனும் ஒரு தலைவியும் 1 பால் வழி உய்க்கப்பட்டு அளவளாவிய காலத்துப் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவகர்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதொரு பொருளாதலின் அதனை அகமென்றனர். இப்பொருள் பற்றிய புலனெறி வழக்கத்தின் இலக்கணத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரமும், இறையனாரகப் பொருள் முதலிய நூல்களும் உணர்த்துகின்றன.
இங்ஙனம் உணர்த்தப்படும் அகப்பொருள் ஐந்து திணையாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொன்றும் முதல், கரு, உரியென்னும் மூவகையாலும் செய்யுளில் விரிக்கப்படும். முதல் என்பன நிலமும் காலமும்; கருவென்பன தெய்வம் முதலியன; உரியென்பன திணைக்குரிய ஒழுக்கங்கள். இவ்வரையறைகள் புலவர்களால் இயற்றப்பெறும் கவி அமைப்புக்கு உரியனவே அன்றி உலகியலுக்கு உரியனவல்ல. ஆனால் இவற்றில் சில மட்டும் உலகியலுக்கு ஏற்புடையனவாகும்.
| “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் |
| பாடல் சான்ற புலனெறி வழக்கம்” (தொல். அகத்.56) |
என்னும் சூத்திர உரையில் இளம்பூரணர்,
‘நாடக வழக்காவது சுவைபட வருவன வெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தானும் குலத்தானும் ஒழுக்கத்தானும் அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரும் அடுப்போருமின்றி வேட்கை மிகுதியால் புணர்ந் தாரெனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவன எல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது’
என வரைவனவற்றால், கவியின் சுவை காரணமாக இத்தகைய வரையறைகள் கொள்ளப்பட்டன என்பதும், சில நிகழ்ச்சிகள் உலகியலோடு ஒத்து வரும் என்பதும் அறியப்படும். பெரும்பான்மையும் நாடக வழக்கே அமைதலின் அதனைத் தொல் காப்பியர் முன்னர்க் கூறினர் போலும். நாடக வழக்கு, கவிஞர்களுடைய உள்ளத்தால் கற்பனை செய்யப்பட்டுப் படிப்போருக்கு இனிமை பயப்பது. இறையனாரகப் பொருள் உரையாசிரியர் இவ்வொழுகலாற்றை,