‘இல்லது, இனியது, நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாதலின் இதனை உலக வழக்கினோடு இயையானென்பது’ (சூ.1, உரை)
எனக் கூறுவதும் காண்க.
எனவே, கவிகள் தம்முடைய கற்பனை ஆற்றலால் பலவகைச் சுவை பொருந்தக் காட்சிப் பொருளையும் கருத்துப் பொருளையும் புனைந்து உரைத்துச் சிறுபான்மை உலகியலோடும் பொருந்த நல்ல பொருளை அமைத்துக் காட்டிய செய்யுட்களே இவ்வகப் பொருட் செய்யுட்களாம் என்பது தெரிய வரும். இவற்றிற் கூறியபடியே உலகியல் நிகழ வேண்டும் என்பது வரையறையன்று; இவை அனைத்தும் உலகியலுக்குப் புறம்பானவையென்று கொள்ளுதலும் தக்கதன்று.
இச்செய்யுட்களில் காணப்படுவனவாகிய தலைவன் தலைவியரிடையே வளரும் அன்புநிலை, அவர் இல்லறம் நடத்தும் முறை முதலியன உலகியலைச் செம்மைப்படுத்தும் தன்மையின. இளம்பூரணர் எடுத்துக் காட்டியனவாகிய தலைவன் தலைவியருடைய ஒப்பு முதலியன செய்யுளுக்காக அமைத்துக் கொண்டவை. இங்ஙனமே சிறந்த தகுதி வாய்ந்தாரையே காப்பியத்துக்குத் தலைவராக அமைக்க வேண்டுமென்று பிற்காலத்தில் காப்பிய இலக்கணம் கூறுவது கவிஞனுடைய சிறந்த மனோபாவங்கள் வெளிப்பட்டு இன்சுவையை உண்டாக்குமென்னும் காரணம் பற்றியே ஆகும்.
முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருள் வரையறையும் கவிச்சுவையை மிகுதிப்படுத்தவே போந்ததென்று தோற்றுகின்றது. உலகத்தில் குறிஞ்சி நிலத்துள்ளாரே அளவளாவுவது, பாலை நிலத்துள்ளாரே பிரிவது, முல்லை நிலத்துப் பெண்டிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்பது, மருத நிலத்தினரே ஊடுவது, நெய்த நிலத்தினரே இரங்குவது என்ற வரையறை இல்லை; ஆனால் கவிஞன் அமைக்கும் உலகத்திலோ இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இது நாடக வழக்காகும். நாடகத்தில் அரங்கில் நிகழும் நிகழ்ச்சிக்கு ஏற்ற களனொன்றை நாடகப்புலவன் அமைத்துக் கொள்வதும், ஓவியப் புலவன் தான் எழுதப் புகும் ஓவியத்திற்கு ஏற்ற நிலைக்களனை எழுதிக் கொள்வதும் போன்றது இது. பிரிவைப் புனையும் ஆசிரியன் துன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டி நீரில்லாத வறுஞ்சுரத்தையும், ஓய்ந்த யானையையும் தான் கூறும் நிகழ்ச்சியோடு இயைபு படுத்துகின்றான். இன்ப உணர்ச்சியை மிகுதிப்படுத்த வேண்டித் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காணும் நிகழ்ச்சியை, 1 ‘சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகமும் கோங்கும்