வேங்கையும் குரவமும் விரிந்து நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து பாதிரியும் பரவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருங்கொடுமுகை சிறந்து வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண்’ அமைத்துக் காட்டுகின்றான்.
இவ்வாறே மற்ற நிலங்களுக்கும் அவ்வந் நிலத்தில் நிகழும் ஒழுக்கத்திற்கும் இயைபிருத்தலை அறியலாகும். நிலத்தைப் போலவே கால வரையறையும் கவிச் சுவையைப் பெருக்குதற்கு அமைந்தது. அவ்வத் திணையின் ஒழுக்கத்திற்கு இலக்கணத்தில் வரையறுக்கப்பட்ட காலங்கள் ஏற்புடையனவாதலை நச்சினார்க்கினியர் 1 தொல்காப்பியப் பொருளதிகார உரையில் விளக்கிச் சொல்கின்றார்.
கருப்பொருள்கள் ஒவ்வொரு வகை நிலத்தின் இயல்பையும் அறிந்து அமைக்கப்பட்டன. அவை உலகியல்போடு ஒத்தன. நல்லிசைப் புலவர்கள் மரம், விலங்கு, பறவை முதலியவற்றின் இயல்புகளை நன்றாக உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
உரிப்பொருளாவது புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் ஆகிய இவ்வைந்தும் இவற்றின் நிமித்தங்களும் ஆகும். இப்பொருளே முதல் கருவென்னும் இரண்டைக்காட்டிலும் சிறந்தது. பிற பொருள்கள் தம்முள் மயங்கினும் உரிப்பொருள் மயங்குதல் தகாதென்பது இலக்கணம்.
முதல், கரு என்னும் இரண்டும் உரிப்பொருளாகிய நாடக நிகழ்ச்சிக்கு நிலைக்களனாக உதவுகின்றன. அவ்விரண்டும் பெரும்பாலும் காட்சிப் பொருள் வகையைச் சார்ந்தன. அவற்றை நல்லிசைப் புலவர்கள் அமைத்துச் செய்யுள் புனைகையில் நாம் அக் காட்சிகளில் ஒன்றி விடுகின்றோம். உரிப் பொருளை அமைக்கும்போது கவியினுடைய இணையற்ற பாவிகத்தை அறிந்து மகிழ்கின்றோம்.
சங்க காலத்துப் புலவர் பெருமக்களின் கவியாற்றலை அறிந்து கொள்வதற்கு இக் குறுந்தொகையும் ஒரு கருவியாகும். இதன்கண் அகநானூற்றைப் போல முதல் கருப் பொருள்களைப் பற்றிய செய்திகள் விரிவாகக் காணப்படவில்லை; திருக்குறளைப் போல அறவே நீக்கப்படவுமில்லை. இலக்கண அமைதி நன்குடையதாகி விரிவும் சுருக்கமும் இன்றி இயற்கைக் காட்சிகளின் எழில் நலங்களையும், அகனைந்திணை ஒழுக்கங்களையும், பண்டைக் கால நாகரிகச் சிறப்பையும், வேறுபல அரிய பொருள்களையும் விளக்கிக் கொண்டு நிற்பது இக் குறுந்தொகை.
1. | தொல். அகத். 6,8,9, உரை. |