குறுந்தொகை


xxvi


  
குறிஞ்சி

     இந்நூல்களில் ஐந்து நிலங்களின் இயல்புகளும் நிகழ்ச்சிகளும் அங்கங்கே நல்லிசைச் சான்றோரால் புலப்படுத்தப்படுகின்றன. குறிஞ்சிச் செய்திகளைப் பாடுதலில் கபிலர் மிக்க திறமை வாய்ந்தவர். வேறு புலவர் பலரும் அத்திணையின் வளத்தை மிக அழகாக அமைத்துக் காட்டுகின்றனர்.

    குறுந்தொகையில் உள்ள குறிஞ்சி நிலங்களில் அந்நிலத்திற்குப் பெயரை அளித்த குறிஞ்சி மலரைக் காண்கின்றோம். 1 கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு வண்டுகள் பெரிய தேனை இழைக்கின்றன.

    அந்நிலத்து வாழ்வோர்களைக் கானவன், குறவன், புனவன் என்று வழங்குவர்; மகளிரைக் கொடிச்சியர் என்பர். தலைமகன் நாடன், வெற்பனென்னும் திணைநிலைப் பெயர்களால் வழங்கப்படுகின்றான்.

    குறவர்கள் மரங்களை வெட்டி அவற்றைச் சுட்ட பின்னர் அந்நிலத்தில், தினை, ஐவனம் முதலியவற்றை விதைத்து அருவி நீரால் விளைப்பார்கள். தினையோடு பருத்தி அவரை என்பவற்றையும் இடையிட்டு விளைப்பதும் உண்டு. தம்முடைய உணவுக்காகத் தினை முதலியவற்றையும், அவ்வுணவுக்குச் சுவை தரும் பருப்புக்காக மொச்சையையும், உடைக்காகப் பருத்தியையும் விளைத்து உண்ண உடுக்கக் குறைவின்றி வாழும் அவருடைய வாழ்வில் உள்ள நிறைவு விளங்குகின்றது.

    தாம் விளைக்கும் பயிரையும் மரத்தையும் ஆடவர் காப்பர். குறவன் தினைப் புனத்திற் பரணிட்டு அதன்கண் இருந்து காத்தலின் அவனைச் 2 சேணோனென்று வழங்குவர். அவன் தினையை உண்ண வரும் யானையைக் கவண் கல்லால் எறிந்து ஓட்டுவான். இராக் காலங்களில் கொள்ளிக் கட்டையை அருகில் வைத்துக் கொண்டிருப்பான். அது கண்டு விலங்கினங்கள் ஓடும். பலாப் பழத்தைக் குரங்குகள் கவராமல் மரந்தோறும் வலைகளை மாட்டிக் காத்தல் கானவர் வழக்கம்.

    மகளிர் தினைப்புனத்தைக் காத்துக் கிளியையும் குருவிகளையும் ஓட்டுவர்; அருவியில் விளையாடுவர்; சுனைப் பூவையும் வேறு மலரையும் கொய்து புனைந்து மகிழ்வர்.

  
 1.  
குறுந். 3. 
 2. 
சேண் - நெடுந்தூரம்.