குறுந்தொகை


xxvii


    அந்நிலத்து வேட்டுவர் மான் முதலியவற்றை வேட்டை ஆடுவர். கற்களை வீசியும் சீழ்க்கை அடித்தும் புதர்களில் மறைந்துள்ள விலங்கினங்களை எழுப்பி அலைப்பர். அவர்களிடம் இரக்கம் என்பது சிறிதும் காணப் பெறாது. பெண் மான் பார்த்திருப்பக் கலைமானின் உயிர்நிலையில் வாளியை எய்துப்பிடுங்குவர் என்று அவர்களது வன்கண்மை ஒரு புலவரால் கூறப்படுகின்றது.

     குறிஞ்சி நிலத்தாருக்கு ஐவனம் தினை என்பனவும், கவலைக் கிழங்கு, தேன், கள் முதலியனவும் உணவிற்குரிய பொருள்கள். கவலைக் கிழங்கைக் கானவர் அகழ்வர். அங்ஙனம் அகழ்ந்த குழியில் ஒரு கானவன் மணியைப் பெற்ற செய்தி ஒரு செய்யுளில் சொல்லப்படும்

    மலைச் சாரல்களில் தேன் மிகுதியாகக் காணப்படும். உயர்ந்த இடங்களில் உள்ள தேனை ஒற்றை மூங்கிலையே ஏணியாகக் கொண்டு ஏறி எடுப்பர். அவ்வேணியைக் 1 கண்ணேணி என்பர். தேனடைக்குக் கேடகத்தை ஒரு புலவர் உவமை கூறுகின்றார். மலைத்தேனைப் பெருந்தேன் என்று வழங்குவர். யானைக் கொம்பை விற்று அதன் விலையால் உணவுப் பொருள் பெற்று உண்பது மலைவாணர் வழக்கம்.

    குறவர் முருகனையும் மலையர மகளிரையும் வழிபடுவர். முருகனுக்கு வெறியாட்டெடுப்பர். மறியறுத்துத் தினையரிசியை வைத்து அரளி மாலையைச் சூட்டி வணங்குவர். தம்முடைய புனத்தில் விளைந்த முதற் கதிரைக் கடவுளுக்கு இட்ட பின்னரே உண்பர். அங்ஙனம் நிவேதித்தலின், 2 ‘‘கடியுண் கடவுள்” என்று அத்தெய்வத்தை ஒரு புலவர் கூறுகின்றார். இதனால் அவர்களுடைய கடவுள் உணர்ச்சி வெளியாகின்றது. கடம்ப மரத்தை வைத்து அதன் அடியில் மேடை அமைத்து அக்கடம்பையே கடவுளாகக் கொண்டு போற்றுவதும் உண்டு. அவ்விடத்துக்கு மன்றம் என்று பெயர். அத்தெய்வத்தின்மேல் ஆணையிட்டுச் சூளுறுவர். கொடியவரைக் கடவுள் ஒறுக்குமென்று அஞ்சி ஒழுகுவர். மலைவாணர் தம் சிறார்களுக்குப் புலிப் பல்லைக் கோத்த தாலியை அணிவிப்பர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி என்றும், பாக்கம் என்றும் வழங்கப்படுகின்றன. கள்ளுண்டு களியாட்டயர்ந்து யாவரும் மகிழ்ந்திருத்தலின், “நறவுமலிபாக்கம்” என்று ஓரூரை ஒரு புலவர் சிறப்பிக்கின்றார்.

  
 1. 
கண் - கணு; கணுவைக் கழிக்காமல் அதனையே படியாகக் கொண்டு
ஏறுதலின் கண்ணேணி என்று பெயர் பெற்றது. 
 2. 
கடியுண் கடவுள் - புதியதை உண்ணும் கடவுள்.