குறுந்தொகை


xxviii


    குறிஞ்சி நிலத்துக்கு வளப்பத்தைத் தருவது அருவி. யாமத்தில் பெய்யும் மழையினால் காலையில் அருவியில் பெருவெள்ளம் பெருகிக் குறிஞ்சி நிலத்தாருக்கு இன்பத்தை உண்டாக்கும். மலையில் இருந்து மிக விரைவாக வீழ்வதாதலின் அதன் வேகத்திற்குத் தேரின் வேகத்தை உவமை கூறுவர். அருவியினால்,மலைச் சாரலில் இயல்பாக முளைத்த காந்தள், வேங்கை மரம் முதலியன வளரும்; மலைவாணர் அருவிக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் ஐவனத்தை விதைத்து அதன் நீரால் விளைவித்துக் கொள்வர். மலையின் மேலுள்ள பலாப்பழம், வாழை, காந்தள், கொறுக்காந்தட்டை, மலர்கள் முதலியவற்றை அருவி கீழே அடித்துக் கொண்டு வரும் செய்திகள் இந்நூலில் காணப்படுகின்றன. அருவியின் ஓசை கேட்பதற்கு இனியது. அதற்கு முழவின் ஒலியையும் முரசின் முழக்கையும் உவமை கூறுவர். தூய வெள்ளிதாக இருத்தலின் அருவிக்குப் பாம்பின் உரியும், வளைந்து வருதலின் பாம்பும் உவமையாகக் கூறப்படுகின்றன. மகளிர் அருவி நீரில் ஆடி மகிழ்தல் வழக்கம். புணையைக் கைக்கொண்டும் நீராடுவர். தலைவி அருவியை முன்னிலைப்படுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் ஒன்று உள்ளது.

    மலைகளிலும் மலையைச் சார்ந்த இடங்களிலும் அங்கங்கே குண்டுக் கற்கள் இருக்கும். அவற்றைத் துறுகல் என்பர். அதற்கு யானையை உவமை கூறுவர். அதற்கு அருகில் மாணைக் கொடி படர்வதாகவும் களிறு துயில்வதாகவும் அக்கல்லின் மேல் வேங்கை மலர்கள் உதிர்வதாகவும் புலவர் பாடியுள்ளனர். மன்றத்தின் கண் உள்ள துறுகல்லில் காந்தள் மலர் மலர்ந்து அவிழ்கின்ற காட்சி ஒரு செய்யுளில் சொல்லப்படுகின்றது. மழை பெய்யாமல் பல நாட்களாகப் புழுதி முதலியன படிந்த துறுகல்லுக்குப் புழுதி படிந்து கழுவப்படாத யானையையும், மழையால் கழுவப்பட்ட துறுகல்லுக்கு நீராட்டிய யானையையும் உவமிப்பர்.

  
பாலை

    குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் தம் இயல்புதிரிதலால் 1 பாலை நிலம் உண்டாகும் என்பர். இங்ஙனம் காலவிசேடத்தால் குறிஞ்சி திரிந்த பாலை,

  
“வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்”     (396) 

என்று குறிக்கப் பெறுகின்றது. இந்நூலில், பாலை நிலத்தில் வெம்மை மிகுதியினால் நீர் நிலைகள் வற்றி உலர்ந்தும், மரம் முதலியன அழிந்தும் உலர்ந்தும், பொலிவிழந்தும், விலங்கினங்கள் வலியழிந்தும் காட்சி அளிக்கின்றன. நீரில்

  
 1. 
சிலப். 11; 64-7