குறுந்தொகை


xxx


கொடுத்து அதற்கு நிழலாக நிற்பதும் இதற்கு உதாரணங்களாகும். தன் பசியையும் கருதாமல் தன் குட்டிக்கு உணவு கொடுத்து ஏதேனும் எஞ்சி இருந்தால் உண்டு விட்டு வேனிற் கதிரின் வெம்மையைத் தான் தாங்கித் தன் மறிக்கு நிழலாக நிற்கும் அக் கலையின் நெஞ்சை, "வழுவினெஞ்சு’’ என்று புலவர் பாராட்டுகின்றார். வேனில் வெம்மையிலே அதன் அன்பு உருகி இலங்கு வதைக் காணும்போது யாவற்றையும் அன்பினால் பிறர்க்கு ஆக்கும் சிறந்த உள்ளத்தைப் பாராட்டாமல் இருக்க இயலுமா? ‘’தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்’’ ஆகும் சிறந்த குணத்தை அம்மானிடத்தே ஏற்றிக் கூறிப் பாராட்டும் புலவரை நாம் பாராட்டுவோமாக.

    பொருள் தேடச் செல்லும் தலைவன் பாலை நிலத்தின் வழியாகச் செல்வதாகவும், தலைவன் தலைவியோடு பாலை நிலத்தின் வழியே தன்னூர் சென்று மணம் புரிவதாகவும் செய்யுள் செய்தல் புலனெறி வழக்கம். முன்னது அறத்தின் பொருட்டு எத்தகைய துன்பத்தையும் பொறுக்கும் ஆற்றலையும், பின்னர் அன்பின் பொருட்டு எல்லா இடையூற்றையும் தாங்கும் மனவலிமையையும் விளக்குகின்றன.

    பாலை நிலத் தலைவன் பெயர்களுள் காளை, விடலை என்பவற்றை இந்நூலில் காணலாம்.

  
முல்லை

     காடும் காட்டைச் சார்ந்த இடங்களும் முல்லையாகப் பகுக்கப் பட்டிருக்கின்றன. இந்நிலம் கார் காலத்தில் வளம் பெற்றுத் திகழும். இங்கே செம்மண் பரந்திருத்தலின் இந்நிலத்தைச் செம்புலமென்பர். இங்குள்ள ஊரைச் சீறூரென்று கூறுவர்.

    இங்கே வாழ்பவர் இடையர். அவர்கள் ஆடுகளையும் பசுக்களையும் மேய்ப்பர். புனத்தையுழுது வரகு முதலியவற்றை விதைப்பர். மழையின் பொருட்டுத் தலையில் கவிழ்த்தற்குப் பறியோலையை வைத்திருப்பர். அவர்கள் இராக்காலத்தே ஆடுகளோடு மேய்ப்புலத்தே தங்கி விடுதலும் உண்டு. அவர்களுக்குப் பாற்சோறு உணவாகும்.

    இந்நிலத்திற்குரிய முல்லை மலரைப் பற்றிய செய்திகள் பலபடியாகச் சொல்லப்படுகின்றன.

  
மருதம்

     வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதமாகும். இந் நிலத்து ஊர்களில் நாகரிகம் மிக்க மக்கள் இல்லறம் நடத்தும் செய்திகளைப் புலவர்கள் புனைந்துரைக்கின்றனர். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவான்.