குறுந்தொகை


xxxiii


போது அத்துளிகள் நூலற்ற முத்துக்களைப் போலத் தோற்றுகின்றனவென ஒரு புலவர் புனைகின்றார்.

  
வேனில்

    வேனிலில் இளவேனில், முதுவேனில் என இரு வகைகள் உண்டு. இளவேனில் காலத்தில் கோங்கும் இருப்பையும் மலரும். அரைத்த சந்தனம் தண்ணென்று இருக்கும். நன் மகளிரும் தண்மையை அடைவர். முதுவேலில் மலையைச் சார்ந்த இடங்களில் பாலையின் இயல்பு உண்டாகும்.

  
சிறுபொழுதுகள்

     சிறு பொழுதுகள் ஐந்தென்றும் ஆறென்றும் இரு வகைக் கொள்கைகள் உண்டு.

 
    
“காலையும் பகலுங் கையறு மாலையும்
    
 ஊர்துஞ்சி யாமமும் விடியலு மென்றிப் பொழுது”     (32)

என்னும் பாட்டில் ஐவகைச் சிறுபொழுதுகள் சொல்லப்படுகின்றன. காலைப் பொழுது புலர்ந்த பின்னுள்ள காலம் என்றும், பகல் நண்பகலை உள்ளிட்ட காலம் என்றும், மாலை சூரியன் மறைந்தது தொடங்கிய இரவின் முதல் யாமம் என்றும், யாமம் இடையிரவென்றும், விடியல் இரவின் கடைசி யாமம் என்றும் கொள்ள வேண்டும். இவற்றின் இடையே எற்பாடென்னும் பொழுதொன்றையும் கூட்டி ஆறாக உரைப்பர் வேறு சிலர்.

  
மாலை

    இச்சிறு பொழுதுகளில் மாலையைப் பற்றியே புலவர்கள் பெரிதும் புனைந்து கூறுகின்றனர். சூரியன் மறைந்த பின்னர் வானம் செந்நிறத்தை அடைகின்றது. நெடு வெண்ணிலவும் உடுக்களும் தோன்றுகின்றன.

    ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் கூம்புகின்றன; முல்லை, பகன்றை முதலியன மலர்கின்றன. கடலும், கானலும் பொலிவிழந்து தனிமைக்கோலத்தோடு தோன்றுகின்றன. தொழில் மேற்சென்றார் தத்தம் தொழிலினின்றும் நீங்கி வீட்டுக்கு வருகின்றனர். விதைக்கும் பொருட்டுக் காலையில் சென்ற உழவர் விதை கொண்டு சென்ற வட்டி நிறைய மலரைப் பறித்து வைத்து மீளுகின்றனர். பசுக்களை வீட்டிற்கு ஓட்டி வரும் இடையன் வழியில் மலர்ந்த முல்லைப் பூவைப் பறித்துச் சூடி வருகின்றான். அந்த முல்லையின் மணமும் பொலிவும் மாலைக் காலத்தை விளக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.