பறவைகள் தத்தம் குஞ்சுகளுக்குரிய இரையை வாயில் கவ்விக் கொண்டு தாம் கூடு கட்டிய மரங்களில் வந்து அடங்குகின்றன. ஒரு பறவை மிக விரைவாகப் பறந்து வருகின்றது; அதன் அலகில் உணவு இருக்கின்றது; அந்த வேகத்தில் அதனைக் கைவிடாமல் பற்றிக் கொண்டு தன்னுடைய கூட்டிற்கு வந்து சேரும்போது தாயை எதிர்நோக்கி நிற்கும் குஞ்சு களிக்கின்றது. அது தன் வாயைத் திறக்கும்போது தாய்ப் பறவை தான் கொணர்ந்த உணவை அதன் உள் வாயிற் செருகுகின்றது. அதனை விழுங்க வேண்டும் என்ற அறிவு வராத அவ்வளவு இளைய குஞ்சு போலும்!
இங்ஙனம் பல பறவைகள் தத்தம் கூடு வந்தடைய, வௌவாலோ பழுத்த மரங்களைத் தேடிப் புறப்படுகின்றது. காடுகளில் மான் தன் பிணையோடு புதர்களில் மறைந்தொடுங்குகின்றது. யானை மலை முழைஞ்சுகளில் ஒடுங்குகின்றது. புலிதன்னுடைய ஆட்சிக் காலம் வந்ததாக அறிந்து முழங்குகின்றது.
இக்காலத்தில் தலைவரைப் பிரிந்த மகளிர் காம நோய் மேலிட்டு வருந்துவதைப் பல்வேறு வகையில் புலவர்கள் சுவைபடப் புலப்படுத்துகின்றனர். தலைவியர் மாலைக் காலத்தை இகழ்வதும், மகளிர் விளக்கேற்றுவதும், விருந்தினரை உண்பதற்கு உள்ளே புகச்செய்து வாயிலைச் சாத்துவதும் இம்மாலைக் காலத்தில் நிகழ்வன.
யாமம்
இடையிரவாகிய இது செறிந்த இருளுடையதாதலின் நள்ளென் யாமம் என்று வழங்கப்பெறும். பலரும் துயில்கின்ற இக்காலத்தில் தலைவரைப் பிரிந்த தலைவியர் அன்றிலின் குரலையும் ஆனேற்றின் மணி ஓசையையும் கேட்டுத் துயிலாது வருந்தி இருப்பர். பிற ஒலிகள் அடங்கி இருத்தலின் கடலின் முழக்கம் மிக்குத் தோற்றும். ஊர்க்காவலர் இக்காலத்தில் தம்முடைய காவற்றொழிலை மிக்கக் கருத்தோடு செய்வர். அவரை யாமங்காவலர் என்பர். நாழிகைக் கணக்கர் துயிலாது விழித்திருந்து யாமக் கணக்கை ஆராய்வார். நொச்சி மலர் உதிரும் காலம் இந்த யாமம் என்று தெரிகின்றது.
வைகறை
வைகறையில் கோழிகள் குக்கூவென்று கூவும். தலைவனோடு சேர்ந்து இன்புறும் தலைவியொருத்தி தம் துயிலுக்கு இடையூறாக வந்த இச்சிறு பொழுதை ‘வாள்போல் வைகறை’ என இழித்துக் கூறுகின்றாள்.