குறுந்தொகை


xxxvi


அசோகந் தழையைக் கையுறையாகக் கொணர்வான்; இதனைத் தோழி அறத்தொடு நிற்கும் பொழுது, “தலைவன் தலைவிக்குரிய கையுறைக்காகத் தழை முழுவதையும் கொய்ததனால் இவ்வசோகின் அடிமரம் மாத்திரம் தனித்து நிற்கின்றது” என்கின்றாள.் (214)

  
அடும்பு

    நெய்தல் நிலத்தில் கடற்கரையில் படரும் கொடிகளுள் மலரை உடையது இது. இதன் இலை இருபிரிவாக இருத்தலின் இதற்கு மானடியை உவமை கூறுவர். இதன் மலர் குதிரையின் கழுத்தில் இடும் சலங்கை மணியைப் போல இருக்கும். மகளிர் அதனைப் பறித்துக் கோதி நெய்தல் மலரோடு கட்டிக் கூந்தலில் புனைவர். இக்கொடி மணல் மேட்டில் படரும்.

  
அத்திமரம்

     அதவமென்று இம்மரம் வழங்கும். ஆற்றயலில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமாக இருக்கும். இதன் பழங்கள் கனிந்து கீழே உதிர, அதன்மேல் ஆற்றில் உள்ள நண்டுகள் பல ஏறி மிதிக்கும் காட்சியைக் கண்டு அனுபவித்த புலவர் ஒருவர் தலைவியின் வருத்த மிக்க நெஞ்சுக்கு ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழத்தை உவமை கூறுகின்றார் (24).

  
அரலைச் செடி

    இதனை அலரி என்றும், அரளி என்றும் வழங்குவர். குறிஞ்சி நில மாக்கள் வெறியாடி முருகக் கடவுளுக்கு இதன் மலரால் ஆகிய மாலையைச் சூட்டி வழிபடுவர். இது குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகத் தோற்றுகின்றது.

  
அவரை

    மலையைச் சார்ந்த இடங்களில் உள்ள புனத்தில் படர்ந்து வளர்கின்ற இக் கொடி இக்காலத்தில் மொச்சை என்று வழங்கப்பெறும். வீட்டில் வளர்கின்ற அவரைக் கொடி வேறு; இது வேறு. தினை விளைவதற்கு முன்னர் மலைவாணர் புனத்தில் அவரையை விதைப்பர்; தினை விளைந்து அறுக்கப்பட்ட பின்னர், அதன் தண்டிலே அவரைக் கொடி படர்ந்து கொத்துக் கொத்தாக மலரும்; புனத்தில் உள்ள புதல்களிலும் இக் கொடி படரும். இதன் மலருக்குக் கிளியின் மூக்கு உவமையாகக் கூறப்படும்.

  
அறுகு

    அறுகம்புல் நீண்டு வளர்ந்திருத்தலின் அதனை, “மாக்கொடியறுகை” (256) என ஒரு புலவர் குறிக்கின்றார். மழைக்காலத்தில் இப்புல் வளம் பெற்று வளர்ந்திருக்கையில்