இதன் காட்சி நீல மணியை நீட்டி விட்டாற்போல இருக்கும். முல்லை நிலத்தில் மானும், குறிஞ்சி நிலத்தில் வரையாவும் இதனை உண்டு மகிழும். இதனை, ‘செங்கோற் புதவு’ என்பர் ஒரு புலவர்.
ஆம்பற் கொடி
மருத நிலத்தில் உள்ள பொய்கையிலும், பிற நீர்நிலைகளிலும் வளரும் ஆம்பல் காலையில் மலர்ந்து மாலையில் கூம்பும் இயல்பினது. வண்டு காலையில் இதன் அரும்பின்பாற் சென்று வாய் திறக்க அது மலரும். தண்மை மிக்க இதன் மலரை மகளிர் மேனியின் தண்மைக்கு உவமித்தல் மரபு. இதன் காம்பினுள் துளையிருத்தலின், “தூம்புடைத் திரள்காலாம்பல்” என்று ஒருவர் கூறுவர். மகளிர் ஆம்பற் பூவின் புறவிதழை ஒடித்து விட்டுத் தலையிற் சூடுவர்; அங்ஙனம் ஒடித்த பூவை முழுநெறி என்பர். தளிர்களாலும் மலர்களாலும் அமைக்கப்படுவதாகிய தழையுடையில் ஆம்பல் மலரையும் தொடுத்தணிவது மகளிர் வழக்கம். மகளிர் வாய் ஆம்பற் பூவின் மணம் உடையதென்பர். இதன் மலர் குருவி, கொக்கு என்பவற்றின் சிறகைப் போலத் தோற்றுவது. வௌவாலின் சிறைக்கு இதன் இலையின் புறத்தை ஒரு புலவர் உவமை கூறுகின்றார்.
ஆலமரம்
ஆல மரத்தின் அடியில் சபை கூடுதல் பண்டை வழக்கம். கோசர் என்னும் ஒரு வகையார் ஒரு பழைய ஆல மரத்தடியில் அவை கூடி ஆராய்ந்தனர். அவ்வவையை, “தொன்மூ தாலத்துப் பொதியில்” என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.
ஆவிரை
ஆவிரம்பூவை மடலேறும் தலைவன் மடற் குதிரைக்கு அணிதல் வழக்கம். பொன்னிறம் உடையதாதலின் இப்பூ, “பொன்னே ராவிரை” எனச் சிறப்பிக்கப்படுகின்றது.
இருப்பை
பாலை நிலத்துக்குரிய மரங்களுள் இருப்பையும் ஒன்று. இது வேனில் காலத்தில் மலரும் என்று தெரிகின்றது. இதன் வெள்ளிய மலர் காம்பினின்றும் கழன்று பாலை நிலத்தில் உள்ள சிறுவழி மறையும்படி உதிர்ந்து கிடக்கும் காட்சியை ஒரு புலவர் விளக்குகின்றார்.
இற்றி
இக் காலத்தில் இச்சி, இத்தியென வழங்குவதும் இம்மரமே. இதன் விழுது ஆலம் விழுதைப் போல நீண்டதன்றாதலின்