குறுந்தொகை


xxxviii


“புல்வீழ்” என்று சொல்லப்படுகிறது. கல்லின்மேல் முளைத்த இற்றியின் வேர் அக்கல்லின்மேற் படரும்; அது சேய்மையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அருவியைப் போலத் தோன்றும்.

  
ஈங்கை

    இஃது ஒரு வகைக் கொடியென்று தோற்றுகின்றது. இது நுண்ணிய முள்ளை உடையது. கூதிரக் காலத்தில் மலர்வது. இதன் அரும்பு செந்நிறத்தை உடையது. இதன் மலரில் பஞ்சி போன்ற துய் இருத்தலின், “வண்ணத் துய்ம்மலர்” என்று சிறப்பிக்கப் பெறும்.

  
உகாய்

    இது பாலை நிலத்தில் உள்ள மரங்களில் ஒன்று. உகாயென்று வழங்குவதே பெரும்பான்மை மரபாயினும் உகாவென்னும் பாடம் சில இடங்களிலே காணப்படுகின்றது. இதன் அடி மரம் சாம்பல் போன்ற நிறமுடையது; அதற்குப் புறாவின் புறத்தை உவமையாகக் கூறுவர்; “புன்கா லுகாஅய்”, “புல்லரை யுகாஅய்” என்ற தொடர்களால் அது மங்கிய நிறத்தை உடைய தென்பது போதரும். இம்மரத்தில் கனிகள் செறிந்திருக்கும்; அவை உருண்டையாகவும் மஞ்சள் நிறமாகவும் இருத்தலின் அவற்றிற்குப் பொற்காசை உவமை ஆக்குவர். இம் மரம் பாலையின் வெம்மையால் தழைச் செறிவின்மையின் இதன் நிழல் இடையிட்டுத் தோன்றும்; அதனை “வரிநிழல்” என்பர். அந் நிழலில் மலைப்பசு தங்கியிருத்தல் ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது.

  
உழுந்து

    முல்லை நிலத்துப் புன்செய் விளைபொருள்களுள் ஒன்றாகிய உழுந்தின் அடிக்குக் குறும்பூழ்ப் பறவையின் காலை ஒரு நல்லிசைப்புலவர் உவமை கொள்கின்றார். வேரின் சிறு பகுதி வெளித்தோன்றிய அடித்தண்டின் தோற்றத்திற்கு அவ்வுவமை மிகப் பொருத்தமாக இருக்கின்றது. முன் பனிக் காலத்தில் உழுத்தங்காய் முதிரும். அதனை மானினம் கவர்ந்து உண்ணும். உழுந்து பின் அதன் காயைக் கழுந்தினால் அடித்து உடைப்பது வழக்கம்.

  
எருக்கு

    ‘குவிமுகி ழெருக்கு’ என்று இது கூறப்படுகின்றது. மடலேறும் ஆடவர் இதன் மலராலாகிய கண்ணியைச் சூடி வீதியிலே வருவர்.