குறுந்தொகை


xxxix


எள்

    இஃது எண்ணென்றும் வழங்கும்; மழை அதிகமாகப் பெய்தால் எள்ளின் காய் அழுகி உள்ளீடெல்லாம் போய் விடும். அத்தகைய காயைச் சிதட்டுக் காயென்பர் (261); சிதடு - குருடு.

  
ஐயவி

    ஐயவி என்பது வெண்சிறுகடுகு. இது மிகச் சிறிதாதலின் ஞாழற் பூவிற்கு இதனை உவமை ஆக்குவர். “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” (50) என்பது காண்க.

  
ஐவனம்

     ஐவனம் என்பது மலையின்மேல் விளையும் நெல் வகையுள் ஒன்று. அருவியின் அருகே விதைத்து விளைக்கப்படுவது. குறிஞ்சி நில மக்களுக்குரிய உணவுப் பொருளாகப் பயன்படுவது.

  
ஓமை மரம்

     ஓமை என்பது பாலை நிலத்து மரங்களுள் ஒன்று. இதன் அடி மரம் பொரிந்து பொலிவற்றிருக்கும். இம் மரங்கள் நிறைந்த இடத்திற்குப் பாழூரை ஒரு புலவர் ஒப்புரைக்கின்றார். இம் மரம் செந்நிறமுடையது. இதன் பட்டையை யானை உரித்து உண்ணும். இதன் குறிய நிழலில் கன்றில்லாத ஒற்றைப் பசு வெயிற்கு அஞ்சித் தங்கியிருக்கும் செய்தி ஒரு செய்யுளில் காணப்படுகின்றது (260). இதன் கவட்டினிடையே பருந்துகள் இருந்து ஒலிக்கும்.

  
கரும்பு

     நிலவளத்தைப் புலப்படுத்துவதாகிய கரும்பு மருத நிலத்திற்குரியது. இதனைப் பாத்திகட்டி நீர்பாய்ச்சி விளைவிக்கும் செய்திகளைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். யானை மிக்க விருப்பத்தோடு இதனை உண்ணும். நுனிப் பகுதியினும் அடிப் பகுதி இனிமை உடையதாக இருத்தலின் தலைவியின் எயிற்றில் ஊறும் நீர் அவ்வடிக் கரும்பின்கண் எறிந்த துண்டத்தைத் தின்றாற் போல இனிக்கின்றதென்று ஒரு தலைவன் பாராட்டுகின்றான் (267). இதன் மலர் வெண்ணிறம் உடையது; மணம் அற்றது; வாடை வீசுங் காலத்தில் மலர்வது. மலராமல் முகைப் பருவத்துள்ள கரும்பின் கூம்பிற்குக் கருப்ப முதிர்ந்த பச்சைப் பாம்பை ஒரு புலவர் உவமை ஆக்குகின்றார்.

  
கருவிளை

     இதன் மலர் நீலநிறம் உடையதாதலின் அதற்கு மயிற் பீலியை உவமை கூறுவர். அது பொறிகளை உடையது. வாடை அம்மலரை அலைப்பதை ஒரு புலவர் சொல்லுகின்றார்.