கவலைக் கிழங்கு
இது முல்லை நிலத்திற்குரியது. வேடர் இதனை அகழ்ந்து உணவாகக் கொள்வர்.
கள்ளி
பாலை நிலத்திற்குரியது. அந் நிலத்தின் வெம்மையால் இதன் அடி பொரிந்திருக்கும்; காய்கள் வெடிக்கும்; அங்ஙனம் வெடிக்கும்போது ஒலி உண்டாகும்; அதனை, “கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி” என்பர் ஒரு புலவர். இதன் முள் கிளைத்திருத்தலை அவர் இதில் குறித்திருக்கின்றார்.
காஞ்சி
மருத நிலத்துக்குரிய மரம் இது. வயல்களுக்கு அருகில் வளர்ந்த இம் மரத்திலுள்ள பூந்தாது தம்மேல் உதிரும் வண்ணம் இதன் கிளையை உழவர் வளைக்கும் செய்தி ஒரு பாட்டில் காணப்படும். இதன் மலர் மணம் உடையது. இதன் பூங்கொத்துக்குப் பயறு உவமையாகச் சொல்லப்படும்.
காந்தள்
குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்ந்தமை பற்றி மலைச் சாரலில் உள்ள ஊர்களை இப்பூவின் விசேடத்தால் குறிப்பர்; “காந்தள் வேலிச் சிறுகுடி”, "காந்தளஞ் சிறுகுடி” எனக் கூறுதல் காண்க. இது மலை முழுவதும் கமழும் மணத்தை உடையது. மலைச்சாரலில் அருவியின் அருகே வளரும். கொத்துக் கொத்தாக மலர்வதாதலின் ‘‘குலைக் காந்தள்” என வழங்கப்படும். இதனிடத்துள்ள நறுந்தாதைத் தும்பி என்னும் வண்டு ஊதும். வண்டு வாய் திறக்க இதன் போது மலர்வதற்கு நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட கடனறி மாக்கள் இடம் விட்டு ஆதரவு செய்து உபசரித்தலை ஒரு புலவர் உவமையாகச் சொல்லுகின்றார்.
தலைவன் தலைவிக்கு அளிக்கும் கையுறைகளுள் காந்தள் மலரும் ஒன்று. ஊர்ப்பொது இடத்தில் இது வளர்ந்திருக்கும். அங்குள்ள துறுகல்லில் மலர்ந்து படிந்து விளங்கும். இதன் மலரை யானை முகத்தில் உள்ள புண்ணுக்கும், நீண்ட காம்போடு கூடிய பூவைப் படத்தை விரித்த பாம்பிற்கும் கை விரலுக்கும் உவமையாக எடுத்தாள்வர். தலைவனது மலையில் இருந்து அருவியில் வந்த காந்தள் கொடியின் கிழங்கைத் தலைவி எடுத்து முயங்கித் தன் வீட்டிற்குக் கொணர்ந்து நட்டு வளர்த்துப் பாதுகாத்தாளென்றதொரு செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.