குறுந்தொகை


xli


     வெண்காந்தள், செங்காந்தள் என இருவகை இதில் உண்டு. செங்காந்தள் தோன்றி என்றும் வழங்கப்பெறும். அதனைக் குருதிப்பூ என்று கூறுவர். கோழியின் கொண்டைக்கு உவமையாக அது சொல்லப்படும்.

     காந்தளோடு முல்லை, குவளை என்பவற்றை இடையிட்டுக் கோதையாகக் கட்டுவதுண்டு. அக் கோதையைத் தலைவியின் மேனிக்கு ஒரு தலைவன் ஒப்புரைக்கின்றான். தலைவியது மேனியின் மணத்திற்கும் நுதலின் மணத்திற்கும் இம் மலரின் மணத்தை உவமித்தல் மரபு.

  
காயா மரம்

     இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.

  
குரவம்

    குராவெனவும் இது வழங்கும். இது பெரும்பாலும் பாலை நிலத்திற்கு உரியதாயினும் நெய்தல் நிலத்தில் வளர்ந்ததாக ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது. இது திணை மயக்கத்தின்பாற் படும். அந்நிலத்தில் புன்க மரத்திற்கருகில் பல மலர்களால் நிறைந்து இம்மரம் விளங்குவதை ஒரு புலவர் புனைகின்றார்.

  
குருந்த மரம்

     முல்லை நிலத்திற்குரிய மரம் இது. கார்காலத்தில் மலர்வது; கொன்றை மரத்தோடு சேர்த்துச் சொல்லப்படுவது.

  
குவளை

    இது குறிஞ்சி நிலத்திலுள்ள சுனைகளில் வளர்வது; “சுனைக் குவளை” எனச்சிறப்பிக்கப்பெறும். கருங்குவளை, செங்குவளை என இருவகை இதில் உண்டு. அவற்றுள் கருங்குவளை மகளிர் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும். இது நீர்நிறைந்த இடத்தில் வளம் பெற்று வளர்வது. இம்மலர் மிக்க மென்மை உடைய தாதலின் வண்டுகள் படிந்த அளவில் அழகு கெடுவது. இதன் நறுமணத்தைத் தலைவியின் மேனி, கூந்தல், நுதல் என்பவற்றின் இயற்கை மணத்திற்கு உவமையாகக் கூறுவர். குவளையோடு காந்தளையும் முல்லையையும் தொடுத்தமைத்தலுண்டு. இதன் காம்பு குறியது. மகளிர் இதனைக் கூந்தலில் புனைதலும் தழையிடையிற் கலந்து தொடுத்து அணிதலும் வழக்கம். தலைவன் குவளைக் கண்ணியை அணிந்து வருதலும் குவளை மாலையைத் தலைவிக்குக் கையுறையாக அளித்தலும் மரபு.