குறுந்தொகை


xlviii


தலைவியைப் பெறவியலாது வருந்தும் தலைவன் பனை மடலால் குதிரையைப் போன்ற ஓர் உருவம் செய்து அதன்மீது ஏறி வருதல் வழக்கம.் அதற்கு மடன்மா என்று பெயர். இதன் மட்டைகள் கருக்குடையனவாக இருக்கும். இதன் காயினுள்ளே பஞ்சி போன்ற நார் இருத்தலின் ஒருவர் அதனை, ‘‘பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்’‘ என்பர். இதன் கள்ளும் நுங்கும் உண்ணுதற்குரியன. இதன் ஓலையால் செய்த குழிந்த பாத்திரத்தைக் குடை என்பர். அதில் மலர்களைப் பெய்து வைப்பர். பனங்குருத்தோலையில் வேப்பம் பூவை வைத்து ஆடவர் சூடுவதுண்டு. பனை மரத்தில் அன்றிலும் தூக்கணங் குருவியும் கூடு கட்டி வாழும். இதன் ஓலை மடல் தோடு எனப்படும்.

  
பாதிரி

    இது வேனிற்காலத்தில் மலர்வது; இதன் மலர் வளைந்திருக்கும்; குறிய மயிர் போன்றதொரு பொருள் அதில் இருத்தலின் மகளிர் மேனியில் படர்ந்த குறுமயிர்க்கு உவமை கூறப்படுகின்றது.

  
பிடா

    இஃது ஒரு மரம்; பிடவெனவும் வழங்கும். இது கார் காலத்தில் மலரும்.

  
பித்திகம்

    இக்காலத்தில் பிச்சியென்று வழங்குவது இதுவே. இது கார் காலத்தில் மலரும். இதன் அரும்பு சிவந்திருக்கும். அதனை மகளிர் கடைக்கண்ணிற்கு உவமை கூறுவர். இதன் மலரைப் பனங்குடையிற் பொதிந்து வைப்பர். அம்மலரின் மணம் நன் மகளிர் மேனி மணத்திற்கு உவமை ஆகும்.

  
பிரம்பு

    இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

  
    பீர்க்கு

    இக்கொடி பீர், பீரம் எனவும் வழங்கப்படும்; இது மழைக் காலத்தில் மலரும். புதர்களில் படர்ந்து வளரும். பீர்க்க மலரின் நிறம் மகளிரது பசலை நிறத்திற்கு ஒப்புக் கூறப்படும்.