புன்கு
நெய்தல் நிலத்துக்குரிய மரங்களுள் இம்மரமும் ஒன்று. இதன்மலர் பரந்த வெண்மணல் தலைவனும் தலைவியும் பழகுவதற்குரிய இடமாகப் பயன்படும். அம்மலருக்கு நெற்பொரியை உவமை கூறுவர்.
புன்னை
நெய்தல் நிலத்தது; மணல் நிறைந்த இடத்திலே தாழ்ந்த கிளைகளை உடையதாக இருக்கும். அக்கிளைகள் கருநிறம் உடையன. அவற்றில் நாரை முதலிய குருகுகள் உறங்கும். கடனீர்த் திவலையால் இம்மரத்தில் அரும்பு தோன்றும். இதன் பூங்கொத்து மின்னும்; அது பொன்னிறமுடைய கேசரங்களை உடையதாக இருக்கும். மகளிர் இதன் மலரைக் கொய்வர். புன்னை நீழலில் தலைமகனும் தலைமகளும் அளவளாவுவர். இம்மரங்கள் அடர்ந்து பொழிலாகக் கடற்கரையில் விளங்கும்.
மரல்
இது மருளெனவும் வழங்கப்படும். மலைச் சாரலில் வளரும். இதனை மலைவாணர் களையாகக் களைந்து எறிந்து விட்டு ஐவனத்தை விதைப்பர். மான் இதனை உண்ணும்.
மராம்
கடம்பின் வகையுள் ஒன்று இது. வழியின் அருகிலே இது வளர்ந்திருப்பது உண்டு. இதன்கண் முருகக் கடவுள் எழுந்தருளி இருப்பர். இதன் அடியில் மேடையிட்டு மன்றமாகக் கொண்டு வழிபடுவது குறிஞ்சி நிலத்தினர் இயல்பு. இதன்பாற் பறவைகள் கூடு கட்டித் தங்கும். வேனிற் காலத்தில் மலர்வது இது. இதன் மலர் வலமாகச் சுழிந்திருப்பதாதலின,் ‘‘வலஞ்சுரி மராம்” எனக் கூறப்படும். குறிஞ்சி திரிந்த பாலையில் உள்ள இம் மரம் தீய்ந்து நிற்கும். அங்ஙனமுள்ள மரத்தில் கண்ட ஒரு பூவைத் தேனும் தும்பியும் வீணே ஊதி ஒன்றும் உண்ணப்பெறாமல் பெயர்ந்தனவென ஒரு புலவர் பாலைநில நிகழ்ச்சியைப் புலப்படுத்துகின்றார்.
மருத மரம்
மருத நிலத்துக்குரிய மரம் இது; நீர்த்துறைகளில் வளர்வது. இதன் மலர் செந்நிறம் உடையது; நீர்த்துறைகளில் நீராட வரும் யானைகளை இம்மரத்தில் பிணித்தல் வழக்கம்.
மாணைக் கொடி
குறிஞ்சி நிலத்தில் வளரும் பெரிய கொடி வகைகளுள் ஒன்று. குண்டுக் கல்லின் அருகே படர்ந்த இக்கொடி அயலில் தூங்கும்