களிற்றின் இவருமென ஒரு செய்தி ஒரு செய்யுளில் கூறப்பட்டுள்ளது.
மாமரம்
இம்மரம் பெரும்பாலும் மருத நிலத்துக்குரியது; சிறுபான்மை கடற்கரையில் இருப்பதாகக் கூறப்படும். தேமா என்பது மாவில் ஒரு சாதி. அதன் பழத்தை, “பால்கலப் பன்ன தேக்கொக்கு” என ஒரு புலவர் சிறப்பிக்கின்றார். பொய்கை அருகில் உள்ள மாவின் பழம் அப்பொய்கையில் விழுதலும், அதனை வாளைகள் கவ்வி உண்ணுதலும், வௌவால்கள் மாம்பழத்தை உண்ணுதலுமாகிய செய்திகள் இந்நூலில் காணப்படும். குயில் மாவின் பூந்தாதைக் கோதும். மாம்பூவில் வண்டு விழுந்து பயிலும். இதன் பூந்தாதுக்குப் பொன் உவமை கூறப்படும். இதன் தளிரை மகளிர் அடிக்கும் மேனிக்கும் ஒப்புக் கூறுவர். மாவின் வடு நறுமணம் உடையது.
மிளகு கொடி
மலைப்பக்கத்தில் வளர்வது. அதனால,் “கறிவள ரடுக்கம்” என்று புலவர் மலைச் சாரலைச் சிறப்பிப்பர்.
முல்லை
முல்லை நிலத்துக்குரிய அடையாளமாக விளங்குவது இது; மழை பெய்யும் கார் காலத்தில் வளம் பெற்று மாலைக் காலத்தில் மலர்வது. முல்லை மலர்வதனால் தலைவி கார் காலத்தின் வரவை அறிவாள். சில இடங்களில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்களில் படரும்படி முல்லையை வளர்ப்பர். அம்மலரைப் பறித்து மகளிர் அணிந்து கொள்வர்.
தலைவன் தான் சென்ற வினையை முடித்து வருகையில் இடையிலே உள்ள முல்லை நிலத்தில் முல்லைக்கொடிகள் பூத்து நிற்பது கண்டு, “யான் உரியகாலத்தே தலைவிபாற் சென்றிலே னென்று கார்காலம் முல்லையரும்பாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றது” என்று கூறுவதாக ஒரு புலவர் அமைக்கின்றார். கதிரை அறுத்த வரகின் தாளிலும் துறுகல்லிலும் முல்லைக் கொடி படர்ந்து மலரும். முல்லை அரும்பிற்கு மகளிர் பல்லும் காட்டுப் பூனையின் பல்லும் நட்சத்திரங்களும் ஒப்பிடப்படுகின்றன. ஆடவர் மேனியும் உத்தம மகளிர் நுதலும் முல்லையின் மணத்தை உடையன என்பர். இதன் மலரை இடையரும் சூடுவர். முல்லை, காந்தள், குவளை என்பவற்றைச் சேர்த்து மாலையாகக் கட்டுதல் வழக்கம். செம்முல்லை தளவெனப்படும்.