மானுக்கு உணவாகும். இதன் கதிரை அரிந்த தாள், “குறைத்தலைப் பாவை” என்று கூறப்படுகின்றது. அத்தாளில் முல்லைக் கொடி படரும்.
வழை
இது குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்களில் ஒன்று. இது வளர்ந்த இடத்தை “வழையம லடுக்கம்” என்று ஒரு புலவர் சிறப்பிக்கின்றார்.
வள்ளி
இது கிழங்கை உடையதொரு கொடி. இது படர்ந்த இடம், “வாடா வள்ளியங்காடு” என்று பாராட்டப் பெறுகின்றது.
வாகை
இம் மரம் பாலை நிலத்துக்கு உரியது; உழிஞ்சில் என்பதும் இதுவே என்று தோற்றுகின்றது. இதன் பூ மணமுடையது. அதற்கு மயிலின் கொண்டையை உவமை கூறுவர். இதன் காய் முற்றி நெற்றாகிக் காற்றால் அலைக்கப்பட்டு ஒலிக்கும். அவ்வொலிக்குப் பறையொலியும் சிலம்பொலியும் ஒப்பிடப்படும். இதன் நெற்று வெண்ணிறம் உடையது. இதன் விதையை அரிசி என்பர்.
வாழை
வாழைமரமடர்ந்த இடத்தைச் சோலையென்பதும் மரபு. இதன் குருத்திற்கு நுகும்பு என்பதும் ஒரு பெயர். அது சுரிந்திருக்கும். அக்குருத்தைத் தடவுதலால் யானை வலியழியும். மலையில் உள்ள வாழை அருவியால் அடித்து வரப்படும். மகளிர் மென்மைக்கு இதன் மென்மை உவமையாகும்.
வெட்சி
காட்டில் வளரும் மரங்களுள் ஒன்று; வளைந்த கிளையை உடையது. இதன் மலரை தம் கூந்தலில் அணிவர்.
வேங்கை மரம்
இம்மரம் குறிஞ்சி நிலத்துக்குரியது. இதன் அடி கரிய நிறமுடையது. இதன்மேல் மயில் இருக்கும். யானையால் மிதிக்கப்பட்ட வேங்கை சாய்ந்து, மகளிர் நின்றவாறே கொய்தற்குரியதாக இருக்கும் செய்தி ஒன்றை ஒரு புலவர் கூறுகின்றார். மகளிர் இம் மரத்தின் மேலேறிப் பூக்கொய்வர். குறிஞ்சி நிலத்தில் உள்ள மன்றங்களிலும் இம் மரம் இருக்கும். இது மலர்ந்த காலத்தில் சிறுவர்கள் இதன்மேல் ஏறாமல் கீழே இருந்தவாறே, “புலி புலி” என்று ஆரவாரிப்பர். கற்களுக்கு