குறுந்தொகை


lix


முதலை

     இதன் கால்கள் வளைந்தவை. இதன் ஆணை ஏற்றை என்றல் மரபு. இதற்கு அஞ்சி இஃதுள்ள வழியில் யாரும் செல்லார். முதலை வாழும் துறை ஒன்றை, “கொடுங்கான் முதலைக் கோள்வலேற்றை, வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை” என்று ஒரு புலவர் கூறுகின்றார்.

  
யானை

     யானையைப் பற்றிய செய்திகள் பல இந்நூலுள் வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் வலியோடு உலவும் யானையையும் பாலை நிலத்தில் உரனழிந்து வெம்மையால் துன்புறும் யானையையும் பற்றிய நிகழ்ச்சிகளைப் புலவர்கள் புனைந்து உரைத்திருக்கின்றார்கள். சிறிய கண்களையும், ஆழ்ந்த வாயையும் மெல்லிய தலையையும் மதத்தால் நனைந்த கவுளையும் சேம்பின் இலையைப் போலத் தோற்றும் செவிகளையும் தினைக்கதிருக்கு உவமை கூறப்படும் துதிக்கையையும் பேயின் பல்லைப் போன்ற கால் நகங்களையும் உடைய ஆண் யானைகள் புழுதி படிந்த மேனியுடன் குண்டுக் கற்களைப் போல நிற்கின்றன. சில யானைகள் கயத்தையும் ஆற்றையும் நாடிச் செல்லுகின்றன. சில மழையில் நனைந்து இன்புறுகின்றன. ஒரு யானை ஒரு துறுகல்லிற்கு அருகில் துயில்கின்றது. அதற்கும் அத்துறு கல்லிற்கும் வேற்றுமை தோற்றாமையின் அங்கே படர்ந்த மாணைக் கொடி அக்களிற்றின் மேல் படர்கின்றது. ஒரு யானை வேங்கை மரத்தடியில் துயிலும் போது அதனுடைய மூச்சு நெடுந்தூரம் ஒலிக்கின்றது. பள்ளி யானைகள் தலைவன் உயிர்ப்பதைப் போலப் பெருமூச்சுவிடுகின்றன. தினைப் புனத்தில் சென்ற யானை கானவன் விட்ட கவணுக்கு அஞ்சி ஓடுகின்றது. இரவில் அப்புனத்தில் சென்ற மற்றொரு யானை அக் கானவன் வைத்துள்ள கொள்ளியைக் கண்டு அஞ்சி வருகையில் விண்ணில் இருந்து வீழும் நட்சத்திரத்தைக் கண்டு அதையும் கொள்ளிக் கட்டை என்று எண்ணி அஞ்சுகின்றது. பெரிய உடலை உடையதாக இருந்தும் சிறு வெள்ளரவினால் ஓர் யானை அணங்கப்படுகின்றது. புதியதாகப் பிடிக்கப்பட்ட யானை ஒன்று வலியிழந்து மயங்கி நிற்கின்றது. அதைக் கண்ட புலவர் தலைவியின்பால் மயங்கிய தலைவனுக்கு அதனை உவமை ஆக்குகின்றார். களிறு மிதித்த மலையடிவாரங்களில் நீர் உண்டாகின்றது. யானைகள் ஒன்றோடு ஒன்று பொருகின்றன; அருகில் நின்ற வேங்கை மரம் அதனால் சிதைகின்றது. புலியைத் தாக்கிப் புண்ணுறும் யானையையும், அப்புலியை வருத்தும் களிற்றையும் குறிஞ்சி நிலத்தில் காண்கின்றோம்.