மூங்கில், கொறுக்கைச்சி, கரும்பு, தினை, யா, ஓமை முதலியவற்றை யானைகள் உண்ணுகின்றன. தான் விரும்பிய தழை உணவை உண்ட யானை மதம் பெருக ஒருசார் நிற்கின்றது.
வருந்திய நடையையும் முழந்தாளையும் உடைய மடப்பிடி ஒன்று தன் கன்று பால் குடித்துக் கொண்டே இருப்பத் தினையை உண்டு மகிழ்கின்றது. யானைக் கன்று குறவர் பிள்ளைகளோடு பழகி வளர்கின்றது.
பாலைநிலத்தில் தங்குவதற்கு நிழலின்மையால் வழிப்போவார் உடலை ஆறலை கள்வர் மூடிய தழைக் குவியலின் நிழலில் ஓய்ந்த யானை நிற்கின்றது. நீர் வேட்கை மிக்கு வருங்கயத்தைத் துழாவுகின்றது. மரத்தின் பட்டையை உரித்து மென்று ஒருவாறு வேட்கை தணிகின்றது. வேறொரு யானை உலர்ந்த மரத்தைப் பிளக்க மாட்டாமல் கையை மடித்து வருந்துகின்றது.
யானை தன் இனத்தைப் பாதுகாத்து உணவூட்டும் இயல்பினது. பிடிகளும் கன்றுகளும் முதிய யானைகளும் அடங்கிய யானைக் கூட்டத்திற்குத் தலைமையுடையதாக ஓர் யானை செல்லும். அதனை யூதநாதன் என்பர். ஏந்தல் என்று இந்நூல் கூறுகின்றது. யாமரத்தைக் குத்தி அதன் பட்டையால் தன் இனத்தின் பசியைத் தீர்க்கும் யானையை இதில் காணலாம்.
களிறும் பெண் யானையும் ஒன்றனோடு ஒன்று இணைந்து அன்பு பூண்டு ஒழுகுகின்றன. குறிஞ்சி நிலத்துக் களிறு தன் மடப் பிடியைத் தழுவிக் குன்றகச் சிறுகுடியில் செல்கின்றது. மாலைக் காலத்தில் அப்பிடியோடு மலைமுழைஞ்சுகளில் புகுகின்றது. புலியினின்றும் பிடியைப் பாதுகாக்கின்றது. பாலை நிலத்துக் களிறோ யாமரப் பட்டையை உரித்துத் தன் பிடியின் பசியைக் களைகின்றது. வாழையால் மதனழிந்து கிடக்கும் களிற்றைப் பிடி தன் கையால் தடவி உபசரிக்கின்றது. இக் காட்சிகளில் அக் களிற்றுக்கும் பிடிக்கும் இடையே உள்ள அன்பு விளங்குகின்றது.
பழக்கப்பட்ட யானைகளைப் பாகர்கள் கழுவுதலும், நீர்த் துறைகளில் உள்ள மருத மரத்தில் பிணித்தலும், போரிடைப் படையாகக் கொண்டு செல்லுதலும், வீரர்கள் அதனைக் கொன்று தாமும் படுதலுமாகிய செய்திகள் இதில் வந்துள்ளன.
பெண்டிர் பிடியின்மேல் ஊர்தல் வழக்கமாதலின் தம்மைப் பாடி வரும் விறலியர்க்குப் பெண் யானைகளை உபகாரிகள் பரிசிலாக அளிக்கின்றனர்.
யானைக் கொம்பு விலை உயர்ந்தது. அதனால் தேர் இயற்றப்படும். அக் கொம்பை விற்று அதன் விலையால் உணவு பெறுதல் குறிஞ்சி நிலத்து வாழ்வார் வழக்கம்.