வருடை
எண்கால் வருடை என்று கூறப்படுவதும் இதுவே. இதனை வருடை மானென்றும், இதன் குட்டியை மறியென்றும் கூறுதல் மரபு. இது செங்குத்தான மலைகளில் வாழும் இயல்பினது.
வரையா
மலைப்பசு அறுகம்புல்லை உண்டு உகாய் மரத்தின் நிழலில் தங்குவதாக ஒரு செய்யுள் கூறுகின்றது. இதன் ஆண் ஏறென்றும் பெண் வரையா என்றும் கூறப்படும். வரையாவை, “மடக்கண் வரையா” என்பர்.
வெருகு
காட்டுப் பூனை வெருகு எனப்படும். இது வேலிகளில் வாழ்வது; மாலையில் சென்று இரை தேடும்; எலியையும் கோழியையும் உண்ணும். இதன் பல் முல்லை அரும்பிற்கு உவமை கூறப்படும். இதன் குட்டியைப் பிள்ளையென்றல் மரபு.
அன்றில்
இது நெய்தல் நிலத்தில் வாழ்வதொரு பறவை. ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்து வாழும். ஆண் பறவையின் உச்சிச் சூட்டானது சிவந்து நெருப்புப்போலத் தோற்றும். இதன் அலகு வளைந்தது; அதற்கு இறாமீனை உவமை கூறுவர். இதன் கால் கரியது. இது பனை மரத்தில் கூடு கட்டி வாழ்வது. ஒரு செய்யுளில் தடா மரத்திலும் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. யாமத்தில் இது நரலும். அவ்வொலிகேட்டுத் தலைவி துயருறுவாள்.
அன்னம்
இப்பறவை பெரும்பாலும் நெய்தற்குரியதாகச் சொல்லப்படும். இது குறுங்காலையும் வெண்ணிறத்தையும் உடையது. மணலில் தங்கியிருக்கும். மிகவும் உயரத்தில் விரைவாகப் பறக்கும்; அவ்விரைவு பற்றிக் குதிரைக்கு உவமையாகக் கூறப்படும்.
எழால்
புல்லூறென்னும் பறவையை எழால் என்பர். இது பாலை நிலத்தில் இருப்பது; வங்கா என்னும் பறவையை அடித்துக் கொல்லும் இயல்பினது.