கணந்துள்
பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்று; நீண்ட காலை உடையது. இப்பறவைகள் கூட்டமாக வசிக்கும். இப்புள் தன் குரலால் வழிப்போவாருக்கு ஆறலைகள் வருண்மையை அறிவுறுத்திப் பெயரச் செய்யும்.
காக்கை
பெரும்பாலும் நெய்தல் நிலத்ததாகக் கூறப்படும். கழுத்தில் சிறிதளவு வெண்ணிறம் உடைய ஒருவகைக் காக்கையைச் சிறுவெண்காக்கை என்பர். இதன் உள்வாய் சிவந்திருக்கும். இது கடற்கரையில் வீசும் திவலையால் நனைந்து சோலையில் தங்கும். கழியைத் துழாவி மீனை உண்ணும். இது கரைந்தால் விருந்தினர் வருவர் என்பர். மகளிர் சோற்றைக் காக்கைக்குப் பலியாக இடுதல் வழக்கம்.
கிளி
கிளியின் வளைந்த அலகிற்குக் கை விரல் நகமும், அவரை மலரும் ஒப்பிடப்படுகின்றன. இது வேப்பம் பழத்தையும் தினைக் கதிரையும் உண்ணும்; குறமகளிரால் கடியப்படும்.
குயில்
குயில் மாமரத்தில் வாழ்வது; கரிய நிறம் உடையது; மின்னுகின்ற தூவியை உடையது. இளவேனிலில் மாம்பூவின் தாதைக் கோதும். அப்பொழுது அத்தாது இதன்மேல் படிந்து பொன்னை உரைக்கும் கட்டளைக்கல்லைப் போலத் தோற்றச் செய்யும்.
குருவி
குருவிகளில் பல வகை உண்டு. இங்கே வீட்டில் உறையும் சிட்டுக்குருவியும் காட்டுக்குருவியும் தூக்கணங்குருவியும் கூறப்படுகின்றன. வீட்டின் இறப்பிலே உறையும் குருவியின் சிறகிற்கு ஆம்பற் பூவின் வாடலை உவமிப்பர். அது வீட்டின் முன்னிடத்திலே உலர்த்திய தானியங்களை உண்டு உலர்ந்த சாணகத்தைக் குடையும். ஆண் குருவி தனது பெண் குருவி கருப்ப முதிர்ந்தமையால் அது கருவுயிர்த்தற்கேற்ற மெத்தென்ற இடம் அமைக்கும் பொருட்டுக் கரும்பின் பூவைக் கோதும் காட்சி ஒரு புலவரால் சொல்லப்படுகின்றது. குருவிகள் தினைக் கொல்லையில் தினையை உண்ணும். தூக்கணங்குருவி பனை மடலில் கூடு கட்டும்.
குறும்பூழ்
இதன் கால் செந்நிறம் உடையது; உழுத்தஞ் செடியின் அடியைப் போல்வது. இப் பறவையை நெய்யிற் பொரித்துப் பாணர் முதலியோர் உண்பர்.