குறுந்தொகை


lxiii


கூகை

     இது பெரும்பாலும் மலையில் வாழ்வதாதலின், ‘குன்றக் கூகை’ எனப்படும். இப்பறவை ஒலித்தலைக் குழறல் என்பர். அவ்வொலி அச்சத்தைத் தருவது; மகளிர் அது கேட்டு அஞ்சுவர். “கூகைக் கோழி” என ஒரு புலவர் இதனைக் குறிக்கின்றார்.

  
கொக்கு
    

கொக்கு நண்டையும் மீனையும் உண்ணும். தனக்குரிய உணவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டே நிற்கும். இதன் புறத்திற்கு ஆம்பல் மலரை உவமை கூறுவர்.

  
கோழி

     ஆண்கோழி சேவல் என்றும், பெண் பேடை என்றும், குஞ்சு பிள்ளை என்றும் கூறப்படும். சேவலின் கொண்டை செங்காந்தளைப் போலத் தோற்றும். கோழி பூனைக்கு இரையாகும். விடியற்காலத்தில் குக்கூவெனக் கூவும். குப்பையைக் கிளைக்கின்ற கோழிகள் ஒன்றனோடு ஒன்று போர் செய்யும்; அதனை, ‘குப்பைக் கோழித் தனிப்போர்’ என்று ஒரு புலவர் சிறப்பிப்பர். பெட்டைக்கோழி குறுங்காலை உடையது; குஞ்சுகளோடு கூடியிருக்கும்; காட்டுப்பூனைக்கு அஞ்சும்.

    காட்டுக் கோழியைக் கானங்கோழி என்பர். அது பொறிகளை உடைய கழுத்தையும் கவர்த்த குரலையும் உடையது.

  
நாரை

    இது வெள்ளிய சிறகையும் பசிய காலையும் செவ்வாயையும் உடையது. சிறகின் இடையே உள்ள தூவி செந்நிறமாக இருத்தலின் முள்ளுமுருங்கையின் மலரை உவமை கூறுவர். இப் பறவை அயிரை, ஆரல், கழிமீன், கெண்டை, நெய்தல், நெற்கதிர் முதலியவற்றை உண்ணும். புன்னைச் சினையில் தங்கியிருக்கும்; வாடைத் துவலைக்கு வருந்தும். இதன் தாள் அகன்றிருக்கும். இதன் காலுக்குத் தினைத் தாளை உவமை கூறுவர். கருங்காலை உடைய ஒரு வகை நாரையும் உண்டு. சிறகின் வலியை இழந்து பறக்கும் ஆற்றல் இல்லாத முதிய நாரை ஒன்று தானே சென்று உணவு தேட இயலாமல் கடற்கரையில் புன்னை மரத்தில் நீரளவும் தாழ்ந்திருக்கும் கிளையில் இருந்து அலைகளில் வரும் மீனை உண்ணலாம் என்னும் அவாவோடு தங்குவதை ஒரு புலவர் கூறுகின்றார்.

  
நுளம்பு

    நுளம்பு என்பது மாட்டீயின் பெயர். ‘ஆனுளம்பு’ என இந்நூலுள் கூறப்படுகின்றது. இவ்வீ இரவிலே பசுக்களைக் கடித்துத் துன்புறுத்தும்.