பருந்து
இது பாலை நிலத்தில் தன் பெடையோடு தங்கும். ஓமை மரத்தின் மீது இருந்து ஒலித்தலும், ஞெமை மரத்தின் மேல் ஊனை விரும்பித் தங்குதலும் கூறப்படுகின்றன.
புறா
பாலை நிலத்தது. இதன் புறத்தை உகாய் மரத்தின் அடிக்கு உவமையாகக் கூறுவர். ஓமை மரத்தின் மேலும் கள்ளியின் மேலும் தங்குவதாகக் கூறப்படுகின்றது. இது புள்ளிகளுள்ள கழுத்தை உடையது; குறுக அடியிட்டு நடக்கும்; துணையோடு சேர்ந்து ஒலித்து மகிழும். ஆண் புறா இரை தேடிப் புறத்தே செல்ல, அது வரத்தாழ்த்தமையால் பெண்புறா அதனை நினைந்து கூவும் செய்தி இதில் காணப்படும்.
மகன்றில்
நீர்வாழ் பறவைகளுள் ஒன்று இது; பூக்களில் பயில்வது. நிலத்தில் வாழும் அன்றில் பறவையைப் போல் ஆணும் பெண்ணும் பிரிவின்றி எப்பொழுதும் இணைந்தே இருக்கும். தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி இருப்பதற்கு மகன்றில் சேர்க்கையை உவமை கூறுவர்.
மயில்
முல்லையிலும் குறிஞ்சியிலும் மயில் இருப்பதாகக் கூறப்படும். இது போழ்ந்தாற் போன்ற கண்ணை உடையது. கார் காலத்தில் ஆரவாரித்து மேகத்தைக் கண்டு மகிழும். கான் ஆற்றங்கரையில் களித்து ஆடும். இதனை வலை அமைத்து வேடர் பிடிப்பர். இது பாறையில் முட்டை இடும்; வேங்கை மரத்தின்மேல் தங்கும்; தினைக்கதிரை உண்ணும். ஆண் மயிலுக்குத் தோகை உண்டு. அத்தோகையில் உள்ள பீலியைப் பேதைப் பருவ மகளிரது மயிர்முடிக்கு உவமிப்பர். அப்பீலியில் கண் போன்ற ஓர் உறுப்பு இருக்கும்; அதனைக் கண்ணென்றே வழங்குவர். மயிலை மகளிரது மென்மைக்கும் அதன் கழுத்தைக் காயா மலருக்கும் அதன் கலாவத்தை மகளிரின் கூந்தலுக்கும் அதன் குடுமியை வாகைப்பூவிற்கும் அதன் காலை நொச்சி இலைக்கும் ஒப்பிடுவர்.
யானையங் குருகு
யானைச் சாத்தனென்னும் ஒருவகைப் பறவை இது போலும். இது நெய்தல் நிலத்தில் வாழ்வது. வீரர்களது ஆரவாரத்தைக் கண்டு வெருவுவதாக ஒரு செய்யுள் கூறும்.