குறுந்தொகை


lxv


வங்கா

    இது பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்று. சிவந்த காலையும் வேய்ங்குழலின் ஓசையைப் போன்ற குரலையும் உடையது. எழால் என்னும் பறவைக்கு அஞ்சும் இயல்பினது.

  
வண்டு

    இதில் பலவகை உண்டு. தும்பி, தேன், கரும்பு, வண்டு என்பன இந்நூலில் கூறப்படுகின்றன. இவற்றுள் தும்பி என்பது உயர்ந்த சாதி; அது நன் மணத்திற் செல்வது; “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி” எனச் சிறப்பிக்கப்படுகின்றது; பூவை ஊதும்; மராம்பூ காந்தள் முதலியவற்றை ஊதும் செய்தி இதில் காணப்படும். அதற்கு நீல மணியை ஒப்பிடுவர். தேன் என்னும் ஒரு வகை வண்டு தும்பியோடு மலரை ஊதும் செய்தி ஒரு புலவரால் சொல்லப்படுகின்றது. நெய்தல் மலரின் மணத்தைச் சுரும்பு நுகர்வதாக ஒரு புலவர் அமைக்கின்றார். கொன்றை, குறிஞ்சி, குவளை, புன்னை, முல்லை, கோங்கு, காந்தள், ஆம்பல் முதலிய மலர்களில் உள்ள மணத்தையும் தாதையும் தேனையும் வண்டு உட்கொள்ளும்; ஐவகை நிலத்துப் பூக்களிலும் பயிலும் தன்மை வாய்ந்தது; மலரும் பருவத்துள்ள பூக்களைச் சென்று ஊதித் திறக்க அவை மலரும். இதனைத் தூதுவிடுவதாகச் செய்யுளியற்றல் மரபு (392).

  
வௌவால்

     இது வாவலெனவும் வழங்கும். இதன் சிறை வலிமையும் வளைவும் மென்மையும் பொருந்தியது; கரிய நிறம் உடையது. இதற்கு ஆம்பல் இலையின் புறம் உவமையாகும். இதன் நகம் மிகக் கூரியது. இப் பறவை மரங்களில் தலைகீழாகத் தொங்கும் இயல்புடையது. முள்ளில்லாத மூங்கிலில் சென்று நரலுவதாக ஒரு செய்யுள் கூறும். இது மெல்லப் பறக்கும். இராக் காலத்தில் பழுத்த மரங்களைத் தேடிச் செல்லும். நெல்லிக்காய், மாம்பழம், பலாப் பழம் என்பவற்றை உண்ணும்.

  
அன்பு

    இங்ஙனம் விரிவாக வகுத்துக் காட்டப்பட்ட பொருள்களின் இயல்புகளால் புலவர்கள் இயற்கையின் உண்மைகளை நன்குணர்ந்து பாடியுள்ளார்கள் என்பது தெரிய வரும். ஐந்திணை ஒழுக்கங்களாகிய உரிப்பொருளை அவர்கள் வெளிப்படுத்தும் முறை மிக இனியது. தலைவனும் தலைவியும் அன்புற்று இன்பம் நுகர்ந்து வாழும் வாழ்க்கையின் பல திறப்பட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இயையக் கூறிச்