குறுந்தொகை


lxvi


செல்கின்றனர். தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள அன்பைப் பற்றிய செய்திகள் மிக உயர்ந்த நிலையை உடையன. இவ்வன்பு காமம், கேண்மை, தொடர்பு, நட்பு, நயம் என்னும் பெயர்களால் வழங்கும்.

     இவ்வன்பு பிறவிதோறும் தொடர்ந்து வரும் என்பது சான்றோர்களின் கொள்கை. ஆதலின், “பயிலியது கெழீஇய நட்பு” (2) என்று இத்தூய காதலைக் கூறுவர். பிறவிதோறும் கணவனும் மனைவியுமாக இருப்பதே இவ்வன்பின் பயன்; இதனை,

  
“கடனறிந் திருவே மாகிய வுலகத்து”     (57) 

     என்பதில் தலைவி குறிக்கின்றாள்; “இப்பிறவி நீங்கி மறுபிறவி அடையினும் நீயே என் கணவனாகுக; நானே நின் நெஞ்சு பொருந்திய மனைவியாகுக” (49) என்று வேண்டுகின்றாள். தலைவனோ தலைவியைப் பெறாத துயர மிகுதியால் துன்புற்ற நெஞ்சை நோக்கி, “ இந்தப் பிறவியோடு இந்நட்பு அற்றுவிடும் என்பதொன்று இல்லை; இது மறு பிறவியிலும் மன்னுதல் பெறும்; ஆதலின் நாம் பெறும் பேறு ஒன்று உண்டு; நீ வருந்தற்க” (199) என்று ஆற்றுவிக்கின்றான்.

    இவ்வாறு பிறவிதோறும் தொடர்ந்து வரும் அன்பு நல்லூழினால் தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடித்தற்குக் காரணமாகின்றது. அவ்வன்பின் தொடர்ச்சியை அறாமல் இயையச் செய்வது ஊழ். அதனைப் பாலென்றும் தெய்வமென்றும் கூறுவர்;

  
“பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்  
  
 சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ”     (366)  

என்று தோழி தலைவனைப் பற்றிக் கூறுகின்றாள்; ‘தலைவனது குணச் சிறப்பை அளந்தறிவதற்குரிய தகுதி நமக்கு ஏது? இது நல்லூழினால் அமைக்கப்பட்ட தொடர்பு’ என்று பொருள்படும் இக் கூற்றினால் புறத்தோற்றத்தில் காணப்படும் தகுதியினால் தொடர்பு உண்டாவதன்றென்பதும் பால் வகுத்தமைப்பதனாலேயே அது நேர்கின்றது என்பதும் பெறப்படும்.

    இளம்பருவம் தொடங்கி தலைவனும் தலைவியும் நட்புப் பூண்டு ஒழுக வேண்டுமென்பது இல்லை. நொது மலர்களாக இருப்பினும் ஊழின் வலியால் பிறவிதோறும் தொடர்ந்த அன்பு மீண்டும் இணைக்கப்படுகின்றது. ஒரு தலைவன் முன் அறியாத தலைவி ஒருத்தியைக் கண்டு அவள்பால் வயப்பட்டு அன்பு பூணுகின்றான். நெடுங்காலம் பழகினாரிடையும் அன்பு