உண்டாதலரிதாகிய இவ்வுலகத்தில் முன் பழக்கம் இல்லாத தம் இருவருடைய மனமும் ஒன்றியதை நினைந்து அவன் வியக்கின்றான்: “என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் என்ன உறவினர்? ஓருறவும் உடையரல்லரே! என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவுடையவர்? அவர்களுக்கும் கேண்மை இல்லையே! யானும் நீயும் எப்படி அறிவோம்? இதுகாறும் அறிந்தோமில்லையே! இங்ஙனம் இருப்பவும், செம்மையாகிய முல்லை நிலத்தில் பெய்த மழை நீர் அந்நிலத்தோடு இயைவது போல நம் இருவருடைய அன்புடை நெஞ்சமும் தாமே கலந்தனவே! என்ன வியப்பு!” (40) என்பது அவன் கூற்று. நொது மலர்களாகத் தோற்றிய அவ்விருவரிடையே ஒளித்திருந்த அன்பு தக்க காலத்தில் வெளிப்பட்டு ஒன்றுகின்றது.
இதைவிட வியத்தற்குரியதாகிய அன்பின் செய்தி ஒன்று வேறொரு செய்யுளில் கூறப்படுகின்றது; பகைஞர்களாகத் தோற்றிய இருவரிடம் பழைய அன்பு ஒன்றி விடுகின்றது: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியே செல்கின்றனர். அவ்விருவரையும் இளமைக்காலத்தில் பகைஞர்களாகக் கண்டவர்கள் சிலர் பாலையின் வெம்மையையும் கொடுமையையும் மறந்து அவர்கள் அப்பொழுது இணைந்து செல்வதைப் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்டாகும் வியப்பும் ஊழின் வலியினிடத்தே தோன்றிய மதிப்பும் அளவற்றன; “என்ன வியப்பு! சிறு பிராயத்தில் இவன் இவளுடைய தலை மயிரைப் பிடித்து இழுப்பான்; இவளும் இவனுடைய மயிரைப் பிடித்திழத்து ஓடுவாள்; செவிலியர் தடுத்தாலும் நில்லாமல் காரணம் இல்லாத சண்டையைச் செய்து கொண்டிருப்பார்கள். இப்பொழுதோ மெல்லிய இரட்டை மாலை சேர்ந்தாற்போல இவர்கள் மணம் புரிந்து மகிழ்தற்குரியவரானார்கள். இப்படிச் செய்த ஊழ்வினையே! நீ மிக நல்லை!” (229) என்று பாலையை அவர்கள் வாழ்த்துகின்றார்கள்.
தலைவனிடமும் தலைவியினிடமும் இவ்வன்பு மறைந்து நிற்கின்றது. நல்லூழின் திறத்தினால் தக்க செவ்வி உண்டாகும் போது அது சூரியனைக் கண்ட தாமரை போல மலர்கின்றது. ‘‘காமம் என்பது ஒரு நோயன்று; துயரமும் அன்று. அது மக்களிடத்தே மறைந்து நிற்கும் ஒரு குணம். அது மிகுதலும் தணிதலும் இல்லை. தழையுணவைத் தின்ற யானைக்கு மதம் உண்டாவது போலப் பால் வயத்தாற் கூட்டப்பட்டாரைக் காணும்போது அது வெளிப்படும் (136) என்று அவ்வன்பின் இயல்பை ஒரு புலவர் உணர்த்துகின்றார். அங்ஙனம் காணும் காலத்து வெளிப்படுவதாதலின் அதனை, “கண்டர வந்த காம