குறுந்தொகை


lxviii


வொள்ளெரி” (305) என்று ஒரு நல்லிசைப் புலவர் நவில்கின்றார். அது பிறவி தோறும் தொடர்ந்த பழமையதாயினும் தோற்றும் போதெல்லாம் புதிய இன்பத்தை உடையது; இக்கருத்து, “விருந்தே காமம் பெருந்தோ ளோயே” (204) என்பதில் வெளிப்படுகின்றது. கண்ட மாத்திரத்தே நெஞ்சம் கலந்த காதல் பண்டை உறுதியைப் பெற்று விடுகின்றது. நிலத்தினும் பெரிதாகவும் வானினும் உயர்ந்ததாகவும் நீரினும் ஆழம் உடையதாகவும் வளர்கின்றது (3); உயிர் அக்காதலாகிய பெரும்பழத்தைத் தாங்கி நிற்கும் காம்பைப் போல நிற்கின்றது (18); காம்பைக் காட்டிலும் பழத்திற்குத் தானே மதிப்பு? அது போல உயிரினும் அவ்வன்பு சிறந்து விளங்குகின்றது. கடல்சூழ் மண்டிலத்தைப் பெற்றாலும் அந் நட்பு விடுதற்கரியதாகின்றது (300). அது நாணத்தால் வெளிப்படாமல் தலைவியின் உள்ளே கிடந்து தாயில்லாத முட்டைபோல மெலிவடைகின்றது. யாமைப் பார்ப்புத் தாயின் முகம் நோக்கி வளர்வது போலத் தலைவனது காட்சியால் தளிர்ப்பதாகிய அது புறத்தேயுள்ள இடையூறுகளால் சிலகால் பொலிவிழக்கின்றது. அப்பொழுது அதனை உள்ளடக்கி வைக்கும் ஆற்றலில்லாத தலைவி அதனை நோயாக நினைக்கின்றாள். தலைவனும் அங்ஙனமே தலைவியைக் காணப் பெறானாயின் அன்பு தடைப்பட்டு வருந்துகின்றான்; உள்ளந்தாங்கா வெள்ளத்தில் நீந்துகின்றான்; ‘இந்நோய் பரந்தது; பொறுத்தற்கரிது’ என்று நண்பனிடம் கூறுகின்றான்.

    தலைவியோ, ‘பொறையரு நோய்’ கொண்டு என்பு உருக நலிந்து வாடுகின்றாள். அன்பைப் பகையாகக் காண்கின்றாள்; “இகலுந் தோழிநங் காமத்துப் பகையே” (257), “சேர்ப்பனொடு செய்தன மன்றவோர் பகைதரு நட்பே” (304), “பகையாகின்றவர் நகை விளையாட்டே” (394) எனக் கதறுகின்றாள்.

     பிரிவின்றி வாழ்தலே அன்பு வளர்தற்கு வழி என்பதைத் தலைவனும் தலைவியும் உணர்கின்றனர். “பிரிவின் றாயினன்று மற்றில்ல... நாடனொடு கலந்த நட்பே” (134), “தணப்பருங்காமம்” (177) என்னும் கூற்றுக்களில் இக் கருத்தைக் காணலாம். தலைவனோ, “பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்” என்றும், “வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (32) என்றும் கூறுகின்றான். பிரிவரிதாகிய தண்டாக்காமம் பிரிவினால் இடையூறு உறுவதினும் உயிர் போதல் சிறந்தது என்பதே அன்புடையார் துணிபு (57).

  
“விரிநீர்ச் சேர்ப்ப னீப்பி னொருநம்  
  
 இன்னுயி ரல்லது பிறிதொன்  
  
 றெவனோ தோழி நாமிழப் பதுவே”     (334)