குறுந்தொகை


lxix


என்பது தலைவியின் கூற்று. தலைவன் பிரிவினால் உயிரிழத்தலை அவள் பாராட்டவில்லை. மறுமை உலகத்தும் மன்னுதல் பெறுமென்ற துணிவினால் அவளுக்குக் காதலிழத்தலினும் சாதலே சிறந்ததாகத் தோன்றுகின்றது. “யாம் எம்முடைய காதலரைக் காணேமாயின் கரையிலுள்ள கற்களோடு உராய்ந்து செல்லும் நுரையைப் போல மெல்ல மெல்ல உயிர் தேய்ந்து இல்லை யாவோம்” என்று ஒரு தலைவி இயம்புகின்றாள்.

    எவ்வகை இடையூறு உற்றாலும் அன்பு அழியாதென்னும் துணிவு காதல் மாட்டே இருத்தலின் அவர்கள் உலகியலோடு பொருந்தி வாழ்கின்றார்கள். அடிக்கடி கண்டு அளவளாவாவிடினும் மனமொன்றிய அன்பு தேயாதென்பதை,

  
“காம மொழிவ தாயினும் ... எம் 
  
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே”     (42) 

என்பதில் கபிலர் உணர்த்துகின்றார். இங்கே காமம் என்றது மெய்யுறு புணர்ச்சியை; தொடர்பென்றது அன்பினை. “ யார் எவ்வாறு பழித்தாலும் எம் அன்பு அழியாதென்பதை நான் நன்றாக அறிந்தேன்” (170) என்று ஒரு தலைவி கூறுகின்றாள். “தலைவனோடு நாம் கொண்ட காதல் நன்றாகக் கட்டப் பெற்றது; நன்றாக முடிந்தமைந்தது; அவிழ்த்தற்கரியது” (313) என்று ஒருத்தி சொல்கின்றாள்.

     அன்பின் வயப்பட்டார் தமக்கு அன்புடையாரால் தீங்கு நேர்ந்தாலும் அதனைத் தீங்காகக் கருதாமல் ஒழுகுவர். “தலைவனோடு நாம் அளவளாவாவிடினும் அவனைத் தலைவனாகப் பெற்றோம், அவனோடு நட்புச் செய்தோம் என்ற அளவிலே எமக்கு இன்பம் உண்டாகின்றது” (61), “தலைவனது நட்பு என் தோளை மெலிவித்தும் அமைதியைத் தந்தது” (90), தலைவன் கொண்ட கேண்மை நாம் பசந்தாலும் தான் பசப்பை யுறாது” (264) என வரும் கூற்றுக்களில் அன்பானது குறைவையும் நிறைவாகக் கொள்ளுமென்ற உண்மை விளங்குகின்றது அல்லவா? தலைவனால் என்ன துயருற்றாலும் அவனை, “அன்றை யன்ன நட்பினன்” (385) ஆகவும், “அக் குன்றநாடன் கேண்மையை என்றும் நன்று” (38) ஆகவும் மறுவில் நட்பாகவும் (247) தலைவி காண்கின்றாள். இவ்வன்புடைக் காமத்தின் விளைவைப் பற்றிப் புலவர்கள் கூறுவனவற்றை ஆராய்கையில் அதன் மென்மையையும் நுண்மையையும் வியக்கத்தக்க ஆற்றலையும் அறிந்து இன்புறுகின்றோம். “ஐதே காமம்” என்று நம்மைப் போலவே பாங்கியும் வியப்படைகின்றாள்.