குறுந்தொகை


lxx


    இத்தகைய சிறந்த அன்பினைப் பூண்ட தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்து வாழும் வாழ்க்கை இரண்டு வகைப்படும். அவை மணம் புரிந்து வாழ்வதற்கு முன்னதாகிய களவொழுக்கமும், அதன் பின்னதாகிய கற்பொழுக்கமும் ஆகும். களவொழுக்கமாவது தலைவனும் தலைவியும் அடுப்பாரும் கொடுப்பாருமின்றித் தெய்வத்தால் கூட்டப் பெற்று அன்புற்றுப் பிறர் தம் ஒழுக்கத்தை அறியாவாறு ஒழுகுதல். இதனைக் களவென்றும், ஒளித்த செய்தி என்றும், மறை என்றும் புலவர்கள் குறிக்கின்றார்கள். தலைவனும் தலைவியும் முதலில் கண்டு அளவளாவும் நிகழ்ச்சியை இயற்கைப் புணர்ச்சி என்பர்.

  
இயற்கைப் புணர்ச்சி

    தலைவன் தன்னுடைய ஏவல் இளையரோடு வேட்டை யாடுதற்குச் செல்லுங்காலத்தில் தலைவியைக் காண்கின்றான். கண்டு அவளது அழகில் ஈடுபடுகின்றான்; அவளது கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையைப் போல அவனைப் பிணிக்கின்றது. அவனது நெஞ்சம் தலைவியின் கண் வலையில் படுகின்றது. தலைவியும் நெஞ்சம் நெகிழ்கின்றாள். அன்புடை நெஞ்சங்கள் ஒன்றுபடுகின்றன. செம்புலப் பெயனீர் போல இருவரும் அளவளாவுகின்றனர். அப்பொழுது தலைவன் தலைவியினது நலத்தைப் பாராட்டி, “நின்னைப் பிரியேன்; பிரியின் ஆற்றேன்” என்று வஞ்சினங் கூறுகின்றான்;

  
“மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப  
  
 நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந் 
  
 திரவலர் வாரா வைகல் 
  
 பலவா குகயான் செலவுறு தகவே”     (137) 

என்று சூளுறுகின்றான். அப்பொழுது அவன் தெய்வங்களின் மேல் ஆணையிட்டு உறுதிமொழி அளிக்கின்றான்;

  
“நேரிறை முன்கை பற்றிச் 
  
 சூரர மகளிரொ டுற்ற சூள்”     (53) 

    பிழையாதென்றும் தன்னை அவன் பிரியானென்றும் தலைவி தெளிகின்றாள். அப்பால் தலைவன் பிரிந்து விரைவில் வருவதாகக் கூறிச் செல்கின்றான்.

     சிற்றிலிழைத்து விளையாடுகையிலும் விழாக் காலத்திலும் தலைவன் தலைவியைக் கண்டு அன்பு பூண்ட நிகழ்ச்சிகளும் காணப்படுகின்றன.