குறுந்தொகை


lxxi


இடந்தலைப்பாடு

    இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவன் முன்னர்த் தான் தலைவியைக் கண்ட இடத்தைச் சார்ந்து அவளோடு அளவளாவுதல் இடந்தலைப்பாடு என்னும் பெயர் பெறும். தலைவியினது நலத்தை நயந்து அவளை மீண்டும் எய்தப் பெற்றுத் தலைவன் உவக்கின்றான். அவளுக்குப் பாவை செய்து கொடுத்தும் அவள் தினைப் புனத்தைக் காக்கையில் உடனிருந்து கிளியோப்பியும் தொய்யில் முதலியவற்றால் அவளைப் புனைந்தும் அளவளாவுகின்றான்.

  
பாங்கற் கூட்டம்

     இங்ஙனம் அளவளாவிவரும் தலைவன் இடையிடையே தலைவியைப் பிரியும்படி நேர்தலின் அப் பிரிவினால் உள்ளம் மெலிந்து, உடல் வலி குன்றிச் சோர்வுறுகின்றான். அச் சோர்வு புறத்தார்க்குப் புலனாகும்படி இருத்தலின் அவனுடைய பாங்கன் அதனை உணர்கின்றான். தலைவன் கூற்றால் அவன் ஒரு தலைவியினிடம் ஈடுபட்டதை அப்பாங்கன் அறிந்து தலைவனை இடித்துரைக்கின்றான்.

    பார்ப்பனப் பாங்கன், வேறு பாங்கன் எனப் பாங்கர் இரு வகைப்படுவர். 156-ஆம் செய்யுளில் பார்ப்பனப் பாங்கனது இயல்பு கூறப்படுகின்றது. ‘இடிக்குங் கேளிர்’, ‘சிறா அரேமுறு நண்பன்’, ‘புலவர் தோழன்’ எனப் பாங்கன் பாராட்டப்படுகின்றான். தலைமை நிலையுடைய தலைவனும் இடித்துரைக்கும் பாங்கனை உடையான் என்னும் செய்தி நட்பின் உயர்வைச் சான்றோர் அறிந்திருந்த முறையைப் புலப்படுத்தும். மிகுதிக் கண் மேற்சென்றிடித்தற் பொருட்டே நண்பர் இருத்தலின், பாங்கர் அத்தகைய சிறந்த கடமையைச் சோர்வின்றிச் செய்கின்றனர். பாங்கனால் கழறப்பட்ட தலைவன் தனது ஆற்றாமை மிகுதியையும் தலைவியினது இன்றி அமையாமையையும் தெரிவித்த பின்னர் பாங்கன் உண்மை தெளிந்து தலைவனது நிலை குறித்து இரங்குகின்றான்.

  
பாங்கியிற் கூட்டம்

     மீட்டும் நாள்தோறும் தலைவியை அடைந்து உவக்கும் தலைவன் அவளது உயிர்ப்பாங்கியை உணர்ந்து அவள் வாயிலாகத் தலைவியின் நட்பை வளர்க்க எண்ணுகின்றான். இங்ஙனம் பாங்கிக்கும் இந் நட்பு அறிவுறுத்தப்பட்ட பின்னர் நிகழ்ந்து வரும் ஒழுக்கம் பாங்கியற் கூட்டம் எனப்படும். தலைவியும் பாங்கியும் ஒருங்கிருந்து பயிலும் தினைப் புனத்துக்குத் தலைவன் செல்கின்றான்; தலைவிக்கும் பாங்கிக்கும்