குறுந்தொகை


lxxii


உள்ள மன ஒற்றுமையை உணர்கின்றான்; “இவ்விருவரும் நீராடுகையில் இத்தலைவி புணையின் முதலைக் கைக்கொண்டால் தோழியும் அதனையே கைக் கொள்கின்றாள்; புணையின் கடையைக் கொண்டால் அதனையே கொள்கின்றாள்; புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகினால் ஆண்டும் வருகுவள் போலும்!” (222) என வியந்து அவளே தான் நினைந்த செயலை முடித்துக் கொள்வதற்கேற்ற வாயிலென்பதை உணர்கின்றான்; ஆதலின், ஏதேனும் ஒரு காரணத்தை மேற்கொண்டு அவளை அணுக எண்ணி, அசோகந் தழையைக் கையுறையாகக் கொண்டு செல்கின்றான்; பன்னாள் வந்து பணிமொழி பயிற்றித் தோழியினது நெஞ்சை நெகிழ்க்க எண்ணுகின்றான்; காந்தள் மலரைத் தருகின்றான்; நீலப் பூவை அளிக்கின்றான்; தன் உள்ளத்துள்ள துயரைச் சொல்ல மாட்டாமல் துயருறுகின்றான். தோழியோ அவனை மறுக்க எண்ணுகின்றாள்; “ எங்கள் குன்றம் முழுவதும் காந்தள் மலர் மிகுதியாக உள்ளது. உம்முடைய காந்தட்பூ எமக்கு வேண்டுவதன்று” (1) என்று அவனது கையுறையை மறுக்கின்றாள். அப்பால் தலைவன் வேறு வழியின்றி, “நான் மடலேறித் தலைவியினிடத்து எனக்குள்ள தொடர்பை ஊர் அறிய வெளிப்படுத்துவேன்” என்று கூறுகின்றான்.

  
மடலேற்றம்

     மடலேற்றம் என்பது தான் விரும்பிய தலைவி ஒருத்தியைப் பெறாத தலைவன் பனை மடலாற் குதிரை போன்றதோர் உருவம் அமைத்துத் தன் படத்தையும் தலைவியின் படத்தையும் எழுதிக் கையில் வைத்துக் கொண்டு வீதியினிடையே ஊர்ந்து வருதல். காமம் முற்றிய தலைவன் மடலூருங்காலத்தில் எருக்கங்கண்ணியைச் சூடுவான்; வெள்ளென்பை அணிவான்; மடன் மாவிற்கு மணியணிவான்; ஆவிரம்பூ மாலையைப் புனைவான்; நாணத்தை ஒழித்து அதன் மேல் ஏறி வீதியினிடத்தே வந்து, “இன்னாள் செய்தது இது” என வெளிப்படக் கூறுவான். அது கேட்ட சான்றோர் அத்தலைவனுக்குத் தலைவியை மணம் புரிவிக்கும் முயற்சிகளைச் செய்வர். இங்ஙனம் மடலேறுதலைப் பற்றிய செய்திகள் தலைவன் “நான் மடலேறுவேன்” என்று கூறும் செய்யுட்களால் அறியப்படுவனவாகும். அவன் மடலேறுவதாகக் கூறுதலோடு அமைவானேயன்றி ஏறான்; அங்ஙனம் ஏறுதல் அன்புடைக் காமமாகாது; பெருந்திணையின் பாற்படும்.

    தலைவனது உண்மை அன்பை உணர்ந்து கொண்ட தோழி அவன் கொடுக்கும் கையுறையைத் தலைவிபாற் கொண்டு சென்று அவனது நிலையைப் புலப்படுத்துவாள். அப்பால் நிகழும்