நிகழ்ச்சிகள் யாவும் அத் தோழியைத் துணை கொண்டே தலைவன் தலைவியரால் நிகழ்த்தப் பெறும்.
பகற்குறி
தோழியினது துணையினால் தலைவன் தலைவியைக் கண்டு பழகும் இடத்தை அறிகின்றான். வீட்டிற்கு வெளியே பகற்காலத்தில் அவ்விருவரும் சந்தித்துப் பழகுதலைப் பகற்குறி என்பர். அவன் தலைவியைத் தினைப்புனத்தும் பொழிலிடையும் கண்டு இன்புற்றுப் பிரிகின்றான். தலைவி அவன் மார்பு புணையாகச் சுனையாடுதல் முதலிய இன்ப விளையாடல்களைப் பயில்கின்றாள். இக் கூட்டத்திற்கு இடையூறு வாராமல் தோழி அவ்வப்போது தலைவனுக்குக் குறியிடம் பெயர்த்துக் கூறுகின்றாள்.
பகற்குறியிடையீடு
தலைவன் வரத் தாழ்த்தலால் தலைவி துன்புறுகின்றாள். தாய் அறிவுறுத்துவாள் என்ற அச்சத்தால் பகற்குறியிடம் மாற்றப்படுகின்றது. இவை பகற்குறியிடையீடு எனப்படும். அப்பால் தினை முதிர்ந்த பின்னர்த் தலைவியைத் தமர் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார்கள்.
இரவுக்குறி
அக்காலத்தில் தலைவன் இரவில் கழியும் காடும் கடந்து தலைவியினது வீடு சென்று தான் வந்ததைச் சில குறிப்பினால் புலப்படுத்துகின்றான். தலைவி அதனை அறிந்து அவனைக் கண்டு அளவளாவுகின்றாள். இத்தகைய ஒழுக்கத்தைக் கூறும் பகுதி இரவுக்குறி எனப்படும். இரவுக்குறியில் சில சமயங்களில் தலைவன் தலைவியினது வீடு வந்து அவள் வீட்டில் உணவின் பொருட்டுத் தங்கியிருக்கும் விருந்தினர்களுள் ஒருவனாகப் புகுந்து உணவருந்தித் தலைவியையும் கண்டு செல்வான். தலைவன் இரவுக்குறி வந்தொழுகும் பொழுது தேரில் வருதலும் உண்டு. அங்ஙனம் வருங்கால் அதனை நெடுந்தூரத்தே நிறுத்தி விட்டுத் தனியே வருவான்; வந்து குறிப்பாகத் தலைவியின் வீட்டுக் கதவைத் தட்டுவான்; இதனை, “இரவுக் கதவமுயறல்” என்று ஒரு புலவர் கூறுகின்றார். அவன் தன் மார்பில் சந்தனம் பூசியும், முத்துமாலை குவளைக்கண்ணி முதலியவற்றைப் புனைந்து கொண்டும் வருவான். காட்டில் உள்ள விலங்கினங்களுக்கும், வழி தெரியாமல் அடர்ந்துள்ள இருளுக்கும், இடைவிடாது பொழியும் பெரு மழைக்கும் அஞ்சாமல் தலைவியின் அன்பினால் ஈர்க்கப்பட்டு அவன் வருவதனால் அவ்வன்பின் உறுதி புலப்படும்.