குறுந்தொகை


lxxiv


இரவுக் குறியிடையீடு

    தலைவன் இவ்வாறு வருங்காலத்தில் சிலமுறை தலைவியைக் காண இயலாமல் சென்று விடுவான். காவல் மிகுதியால் தலைவி அவனைக் காணுதல் அரிதாகும். அத்தகைய சமயங்களில் அவன் மிக வருந்தி மீள்வான். இங்ஙனம் இரவுக் குறியினிடத்தே தலைவன் தலைவியைக் காணாமல் தடைப்படுதலை, “இரவுக் குறியிடையீடு” என்பர்.

  
வரைவு கடாவுதல்

     நாள்தோறும் அஞ்சுதற்குரிய வழியிடையே தலைவன் வருதலும் அங்ஙனம் அவன் வந்தாலும் சில காலங்களில் தாய் முதலியோரது காவலால் அவனைக் காண முடியாமல் தலைவி வருந்துவதும் களவொழுக்கத்தின் துன்பங்களை உணரச் செய்கின்றன. இவ்விருவரது ஒழுக்கத்தையும் ஊரினர் அறிந்து பழி கூறுகின்றனர். தலைவிக்கு உண்டாகும் வேறுபாடுகளும் அவர் கூறும் பழியை மிகுவித்தற்குக் காரணமாகின்றன. இவற்றை எல்லாம் பாங்கி் தலைவனுக்குக் கூறி இனி மணந்து கொண்டு பிரிவின்றி வாழ்தலே தக்கது என்பதைக் குறிப்பிக்கின்றாள். அவன் இரவுக் குறியையே விரும்பி, வரைதலின் நினைவின்றி இருப்பதை உணர்ந்து பல வகையாலும் தன் கருத்தை அறிவுறுத்துகின்றாள்; ‘இவள் உயிர் சிறிது; காமமோ பெரிது’ (18) என்றும் பிறவாறும் அவனிடம் கூறுவதன்றி, அவன் வந்து வேலி அருகில் நிற்கும் காலத்து அவனது ஒழுக்கத்தைப் பழித்தும் கூறுகின்றாள். இவற்றால் தலைவன் வரைதலின் இன்றி அமையாமையை உணர்ந்து கொள்ளுகின்றான்.

  
வரைபொருட் பிரிவு

     தலைவியை மணம் புரிவதற்குரிய பரிசப் பொருள் பெறுவதற்காகத் தலைவன் பிரிகின்றான். அக் காலத்தில் தலைவி அப் பிரிவைப் பொறாது வருந்துகின்றாள். தோழி, “நின் பொருட்டன்றே அவர் பிரிந்தார்?” என்று இடித்துரைத்தும், “வந்து விடுவார்” என்று ஆற்றுவித்தும் தலைவியினது துயரத்தை ஒருவாறு போக்குகின்றாள்.

  
அறத்தொடு நிற்றல்

    தலைவியினது வேறுபாடு கண்ட தாய் முதலியோர் அவ்வேறுபாடு எதனால் உண்டாயிற்று என்று ஆராயத் தொடங்குகின்றனர். நெல்லை வைத்துக் குறி பார்ப்பவளாகிய கட்டுவித்தியை அழைத்து வந்து கட்டுப் பார்க்கின்றனர். கட்டுப் பார்த்தாலாவது ஒரு முறத்தில் நெல்லை வைத்து அதை எண்ணிப் பார்த்து அவ்