வெண்ணின் வழியே அறிந்த செய்திகளைக் கூறல். அதைப் பார்ப்பவள் தெய்வங்களைப் பாடி அழைத்து நிமித்தம் பார்ப்பாள். ஆதலின் 1 அகவன் மகள் எனப்படுவாள். அப்படி அவள் பாடும் பொழுது உண்மையை எங்ஙனமேனும் அறிவிக்க வேண்டுமென்ற எண்ணமுடைய தோழி, அவ்வகவன் மகளை அணுகுகின்றனள். அவள் ஒவ்வொரு மலையாக வருணித்துப் பாடுகின்றாள். தலைவனது குன்றத்தையும் பாடுகின்றாள். அதைப் பாடி முடித்தவுடன் வேறொன்றைத் தொடங்கும்போது தோழி இடைமறித்து,
| “அகவன் மகளே அகவன் மகளே |
| மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் |
| அகவன் மகளே பாடுக பாட்டே |
| இன்னும் பாடுக பாட்டே யவர் |
| நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (23) |
என்கின்றாள். அந்தப் பாட்டினிடத்தில் மாத்திரம் தோழிக்கு அத்துணை அன்பு இருத்தற்குக் காரணம் யாதென்று தாய் முதலியோர் ஆராய்கின்றனர்; அவளையே கேட்கின்றனர். அவள் உண்மையைக் கூறி விடுகின்றாள். ‘அவர்’ யார் என்பதைத் தாய் முதலியோர் அறிகின்றனர்.
இவ்வாறு கட்டுப் பார்ப்பதை அன்றி வெறியாடும் வேலனை அழைத்து முருகனுக்குப் பலி கொடுத்துத் தாய் முதலியோர் தலைவியின் துயரை நீக்கத் தலைப்படுவதும் உண்டு. வேலன் இது முருகனாலாயதென்று கூறுவான். அப்பொழுது தோழி உண்மை கூறி அறத்தொடு நிற்பாள்.
“இவ்வூராருடைய ஆரவாரந்தான் எவ்வளவு? இவளுடைய நோய்க்குக் காரணம் இன்னதென்று இவர்கள் அறியவில்லையே! இவளுக்குத் தழையாடையை ஒரு தலைவன் கையுறையாகத் தந்தான். அங்ஙனம் தரும் பொருட்டு அவன் தழை கொய்த அசோக மரம் மொட்டையாக நிற்ப, அதனை ஆராயாமல் இவர்கள் அதற்கு அருகிலுள்ள அரலை மலரைப் பறித்து மாலை கட்டி முருகனுக்குச் சூட்டி வழிபடுகின்றார்களே” (214) என்று படர்க்கையாகவும், “முதுவாய்வேல, முருகனை வணங்கி மறியைக் கொன்று பலி கொடுத்தாயாயின் இவளுக்கு நோயைத் தந்த தலைவனது மார்பமும் அப்பலியை உண்ணுமோ?” (362) என்று வேலனை நோக்கியும், “ஆடவன் ஒருவன் குவளைப் பூ மாலையை இவளுக்குத் தந்தான். அதுமுதல் இவள் நீலப் பூவைக் காணும் பொழுதெல்லாம் அவனை நினைத்து