குறுந்தொகை


lxxvi


வருந்துகின்றாள்” (366) என்று செவிலியை நோக்கியும் கூறித் தோழி அறத்தொடு நிற்கின்றாள்.

    சில சமயங்களில் அயலார் தலைவியை மணந்து கொள்ள எண்ணிப் பரிசத்துடன் வருவார்கள். அப்பொழுது அவரை மறுத்துத் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை எண்ணித் தோழி அறத்தொடு நிற்பாள் (379).

  
வரைவு

    வரை பொருளுக்காகப் பிரிந்து சென்ற தலைவன் அதனைஈட்டிக் கொண்டு முதியோர் வாயிலாக அனுப்புகின்றான். அம்முதியோர் தலைவியின் தமர்பால் வந்து தலைவனது கருத்தைவெளிப்படுத்த அவரும் உடம்படுவர். அதனை அறிந்ததோழியும் தலைவியும் பேருவகை பூப்பர். பின்னர்த்தலைவனுக்கும் தலைவிக்கும் மணம் நடைபெறும். மணம்நடைபெற்ற பின்னர் அவ்விருவரும் இல்லறம் நடத்தத்தொடங்குவர்.

  
உடன்போக்கு

     தலைவியினுடைய தமர் தலைவனை ஏற்றுக் கொள்வார் என்ற குறிப்புத் தோன்றாவிடின், தலைவன் தலைவியை அவள் தமரறியாவாறு அழைத்துச் செல்வான். அங்ஙனம் செல்வதில் தலைவி முதலில் நாணத்தால் தடைப்படினும் கற்பின் உயர்வை அறிந்து உடன்போகத் துணிவாள். பாலை நிலத்தின் வழியே அவர் செல்வதாகச் செய்யுள் செய்தல் வழக்கம். அவ்விருவரும் அன்பு பூண்டு அங்ஙனம் செல்லுதலை இடைச் சுரத்துக் கண்டார் வியந்து பாராட்டுவர். தலைவன் தலைவியைத் தன்னூருக்குக் கொண்டு சென்று மணம் புரிவான்; ‘கொடுப்போரின்றி நிகழும் கரணம்’ என்று அதனைக் குறிப்பர். அவ்விருவரும் சென்ற பிறகு அவர்களைச் செவிலி தேடிக் கொண்டு செல்வாள்.

  
இல்லறம்

     இல் வாழ்க்கையில் தலைவி தன் கணவனைப் பேணுவதில் சிறப்புறுகின்றாள். அவள் உணவு சமைத்து விருந்தோம்பித் தன் கணவனுக்கு இட்டு உவக்கின்றாள். நல்ல முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரலைக் கழுவாமல் தன் ஆடையில் துடைத்துக் கொண்டு தன் கண்கள் புகையேறும்படி தாளிதம் செய்து பண்ணிய குழம்பைத் தலைவன் இனிதாய் இருக்கின்றது என்று உவந்து உண்பதைக் கண்டு அவளுக்கு உண்டாகும் உள்ள மகிழ்ச்சி அவளது முகத்தில் பொலிகின்றது. அவனும் வேம்பின் பைங்காயை அவள் தந்தாலும் அதனைக் கற்கண்டுக் கட்டியென ஏற்று உண்கின்றான்.