குறுந்தொகை


lxxvii


பொருட்பிரிவு

    பிரிவென்பதை அறியாமல் இடையீடின்றி இன்பம் துய்த்து இல்லறம் நடத்தும் அவர்களுடைய வாழ்க்கையின் இடையே அறத்திற்கு வேண்டிய பொருளீட்டும் முயற்சி தோன்றுகின்றது. அரசனது அதிகாரத்திற்குட்பட்டு அவனது ஏவலின்மேல் வேற்றூருக்குச் செல்லினும் அங்கே தங்கி வருதலை அறியாத தலைவன் இல் வாழ்க்கைக்குரிய பொருளை ஈட்டும் பொருட்டுப் பிரிகின்றான். தலைவிக்கு உணர்த்தியும் உணர்த்தாமலும் பிரிதல் அவன் வழக்கம். பின் ஒருகால் பிரிதல் நேரும் என்று எண்ணி முன்னரே, “நான் செல்வேன், செல்வேன்” என்று பலகால் கூறுகின்றான். அங்ஙனம் கூறியும் அவன் செல்லானாக, “இவர் செல்வாரல்லர்” என்று தலைவி அதனைப் பொருட்படுத்தாது இருக்கின்றாள். பொருளில்லார் வாழ்க்கை யாசகம் செய்தலைக் காட்டிலும் இழிவு என்பதை உணர்ந்த அவன் ‘’செல்வேன்’’என்று ஒருநாள் கூற, அதனை அவன் முற்கூறிய பொய்ப் பிரயாணமாக எண்ணிப் “போய் வருக” என்று தலைவி கூறுகின்றாள். அதுவே தலைக்கீடாகத் தலைவன் பிரிந்து விடுகின்றான்.

    இங்ஙனமின்றித் தலைவன் பிரிவதற்கு முன்னர் தலைவியின் நுதலை நீவியும் கூந்தலைத் தடவியும் பேராதரங் காட்டிச் சொல்லாது பிரிதலும், தோழி வாயிலாகக் குறிப்பித்துச் செல்லுதலும் உண்டு.

  
பிரிவில் தலைவியின் நிலை

    தலைவன் பிரிந்த காலத்தில் தலைவிக்கு உண்டாகும் துன்பங்கள் பல வகையாகும். அவள் துயிலை இழக்கின்றாள்; அழுகின்றாள்; அவள் உடல் மெலிகின்றது; அவளுடைய கை வளைகள் நெகிழ்கின்றன; தோள் வளைகள் நெகிழ்கின்றன; மற்ற இழைகள் யாவும் நெகிழ்கின்றன; மலர் புனைந்து அலங்கரித்துக் கொள்ளலை அவள் வெறுக்கின்றாள்; மாமை என்னும் பேரழகு தொலைந்து விடப் பசலை பரவுகின்றது; கண்ணும் நுதலும் அழகழிகின்றன; ஆனேற்றின் கழுத்தில் கட்டிய மணியின் ஒலியும், அன்றிலின் குரலும் ஊரெல்லாம் அடங்கிய நள்ளிரவில் துன்பத்தை உண்டாக்குகின்றன.

    மாலைப் பொழுது அவளுக்கு ஒரு கூற்றாகின்றது. எல்லாப் பொழுதும் மாலைக் காலமாகவே தோற்றி அவளைத் துன்புறுத்துகின்றன. தலைவன்பால் யாரையேனும் தூது விடலாம் என்று எண்ணுகின்றாள். தலைவன் கூறிச் சென்ற பருவம் வருகின்றது. “இன்னும் அவர் வரவில்லையே” என்று வருந்துகின்றாள்: