குறுந்தொகை


lxxviii


தோழி, “வந்து விடுவார்” என்றும், “இது தலைவர் கூறிய பருவம் அன்று” என்றும் கூறி ஆற்றுவிக்கின்றாள்; தலைவியைக் கடிகின்றாள்; தலைவனைப் பழிக்கின்றாள். “எங்ஙனமேனும் வந்து விடுவார். அவர் அறங்கருதியன்றே பிரிந்தார்” என்று எண்ணித் தன் கற்பின் இயல்பினால் வன்மை பெற்றுத் தலைவி ஆற்றி இருக்கின்றாள்.

  
தலைவன் நிலை

    பொருளுக்காகப் பிரிந்த தலைவன் உலகியலினின்றும் வழுவாதிருக்க வேண்டித் தன் அன்பினையும் அடக்கிக் கொண்டு ஆள்வினையில் தலைப்படுகின்றான். தான் வந்த காரியம் முடிந்தவுடன் தலைவியின்பால் உடனே போய்ச் சேர வேண்டுமென்று விரைகின்றான். தன் வரவைப் பாணன் வாயிலாகச் சொல்லி அனுப்புகின்றான்; தானும் தேரில் புறப்படுகின்றான்.

  
மீளுதல்

     பாணன் தலைவன் வரவைத் தலைவிபால் அறிவுறுத்துகின்றான். தலைவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவள் தலைவன் வரவை உறுதியாகத் தெரிந்து கொள்ள விரும்பி, “அப்படியா? நீயாகக் கண்டாயா? வேறு யாராவது சொல்லக் கேட்டாயா? உனக்குப் பொன் நிறைந்த பாடலிபுத்திர நகரம் உரியதாகுக! உண்மையைச் சொல். அவர் வரவை யார் வாயிலாகக் கேட்டாய்?” என்று பேரார்வத்துடன் மீட்டும் மீட்டும் உசாவி அறிந்து கொள்கின்றாள். அப்பொழுது அவளுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அவளுடைய மெலிந்த தோள்கள் பருக்கின்றன; கழன்ற வளைகள் இறுகுகின்றன.

    தலைவன் வந்து விடுகின்றான். வீட்டில் அன்று பெரிய விருந்து நடக்கின்றது. தம்முடைய மகிழ்ச்சியை யாவரோடும் விருந்துண்டு பங்கிட்டுக் கொள்கின்றார்கள். அதுகாறும் வருத்தத்தால் விட்ட கண்ணீர் மாறித் தலைவிக்கு மெய்ம்மலி உவகையினால் கண்ணீர் உண்டாகின்றது. அவர்களுடைய வாழ்க்கை அறம் பொருளின் பங்களிற் குறைவின்றி நடைபெறுகின்றது. தலைவன் தன்னுடைய உள்ள நிறைவால், உலகிற்கு வளம் சுரக்கும் மழையை வாழ்த்துகின்றான்;

  
“பெய்தினி வாழியோ பெருவான் யாமே 
  
 செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ  
  
 டிவளின் மேவின மாகிக் குவளைக்  
  
 குறுந்தா ணாண்மலர் நாறும் 
  
 நறுமென் கூந்தன் மெல்லணை யேமே”     (270) 

என்பது அவன் கூறும் வாழ்த்து.