குறுந்தொகை


lxxvix


பரத்தையிற் பிரிவு

    இங்ஙனம் பல வகையாலும் உயர் நெறியதாகிய அன்புடை வாழ்க்கை, பூவிற்குப் புல்லிதழ் வாய்த்தாற் போலவும், மதிக்கு மறுவாய்த்தாற் போலவும் பரத்தையிற் பிரிவென்னும் இழிந்த ஒழுக்கத்தினால் சிறிது கலக்கம் அடைகின்றது. பேராசிரியர் சிற்றம்பலக் கோவையாரின் உரையில்,

     ‘பரத்தையிற் பிரிவு என்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர், வைகலும் பாலே நுகர்வானொருவன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமையை நுகர்ந்தாற்போல, அவள் நுகர்ச்சியின் இனிமை யறிவதற்குப் புறப்பெண்டிர் மாட்டுப் பிரியாநிற்றல். அல்லதூஉம், பண்ணும் பாடலும் முதலாயின காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்கும் தலைவனாதலின் அவர்க்கும் இன்பஞ் செய்யப் பிரியாநிற்ற லென்றுமாம். அல்லதூஉம,் தலைமகளை ஊடலறிதற்குப் பிரிதலென்றுமாம்’

என்று எழுதுவர். இப் பரத்தையில் பிரிவு உலகியலையே கருதி அமைந்தது போலும். தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்பதற்காக இப் பரத்தையிற் பிரிவு அமைந்ததென்பது அத்தனை சிறந்த காரணமாகத் தோற்றவில்லை. கோயில் சிற்பங்களில் சில வகையான காட்சிகள் அமைந்திருத்தலைப் போல இக்கவிஞர்களுடைய சொற் சிற்பங்களில் இஃது அமைந்துள்ளது என்றே தோன்றுகின்றது. முன்னதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்குமெனின் இதற்கும் அக்காரணம் பொருந்தும்.

     எவ்வாறாயினும், பரத்தையிற் பிரிவு நல்லொழுக்கத்திற்கு இழுக்கென்பதே சான்றோர் கொள்கை என்பதை வலியுறுத்தக் குறளிலுள்ள வரைவின் மகளிரென்ற அதிகாரமொன்றே போதியது. மணிமேகலை முதலிய காப்பியங்களில் கள்ளுண் போனையும் பித்தனையும் புனைந்துரைக்கும் காட்சிகளால் அவ்விருவருடைய ஒழுக்கங்கள் சிறந்தனவென்று கவிஞர்கள் கொண்டதாகக் கருதல் கூடாதன்றே! பரத்தையிற் பிரிவினால் தலைவனுடைய விருப்பத்துக்கு இழிவு நேரினும் தலைவியினுடைய கற்பின் திறம் சுடச்சுட ஒளிவிடும் பொன்போல் ஒளிர்கின்றது.

     தலைவன் பரத்தையிற் பிரிந்தான் என்பதை உணர்ந்தும் அக் கொடிய செயலை உள்ளத்துள் மறைத்துத் தலைவி ஒழுகுகின்றாள். அவளுடைய சிறந்த இயல்பு அவளுடைய உயிர்ப் பாங்கியையும் திகைக்க வைக்கின்றது. அவள், “இவள் கற்பு நெறியில் தலை சிறந்து நிற்கின்றாள்” (6, 10) என்று