அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவாதலின் பலவகைக் குறைபாடுகள் பொருந்திய பரத்தையிற் பிரிவிலும் கற்பு நெறியின் சிறந்த தன்மை புலவர்களால் புலப்படுத்தப்பட்டிருத்தல் அறிந்து மகிழ்தற்கு உரியதாகும்.
இவ்வன்பின் வழி நிகழும் வரலாற்றில் அன்பின் வழிவந்த இன்ப முயற்சியும் அதனை நிறுத்தற்குரிய பொருள் முயற்சியும் அப்பொருளால் வரும் அற முயற்சியும் முறையே மேற்கொள்ளப்படுகின்றன. இவை பழைய சங்க நூல் செய்யுட்களிலே உள்ளீடாக இருந்து பல வகையான சுவைகளை உடைய சொற்பொருட்செறிவு பெற்று விளங்குகின்றன.
கூற்று வகை
அகப் பொருள் நூல்களில் உள்ள செய்யுட்கள் யாவும் தலைவன் முதலியோருள் யாரேனும் ஒருவரது கூற்றாகவே அமைந்திருக்கும். இந்நூலுள் பின்வரும் ஒன்பதின்மருடைய கூற்றுக்கள் வந்துள்ளன: (1) இற்பரத்தை 1, (2) கண்டோர் 3, (3) காதற் பரத்தை 2, (4) செவிலித்தாய் 9, (5) தலைவன் 62, (6) தலைவி 180, (7) தோழி 140, (8) பரத்தை 2, (9) பாங்கன் 2.நற்றாயின் கூற்று ஒன்றேனும் காணப்படவில்லை. தலைவி கூற்றே பிறவற்றினும் மிகுதியாக உள்ளது. அதற்கடுத்தபடி தோழி கூற்றின் தொகையும் அதனை அடுத்துத் தலைவனது கூற்றும் அமைந்துள்ளன. இவர்களுடைய கூற்றுக்களில் பிறருடைய கூற்றையும் கொண்டு கூறும் இடங்கள் சில உண்டு.
பரத்தையர்
பரத்தையரில் இற்பரத்தை, காதற் பரத்தை, சேர்ப்பரத்தை என்னும் மூவகையார் சொல்லப்படுகின்றனர். அவர்கள் தலைவனோடு தேரில் சென்று நீராடுதலும் அவனைத் தம்மிடத்தே ஈடுபடச் செய்தலும் தலைவியைப் பழித்தலுமாகிய செயல்களை உடையவர்கள்.
செவிலி
செவிலித்தாய் நற்றாயின் தோழியாகவும் தலைவியின் உயிர்த் தோழிக்குத் தாயாகவும் இலக்கண நூல்களில் சொல்லப்படுகின்றாள். அவள் தலைவியினிடம் பேரன்பு பூண்டு பாதுகாத்தும் அவளுக்கு வேண்டிய உணவு கொடுத்தும் இரவுக் காலத்தில் தன் அருகே துயிலச் செய்து காவல் புரிந்தும் அவள் பிரிந்த காலத்தில் வருந்தித் தேடிச் சென்றும், அவளுடைய இல் வாழ்க்கையைக் கண்டு இன்புற்றும் ஒழுகுகின்றாள்.