குறுந்தொகை


lxxxii


தோழி

    தோழி தலைவியோடு ஒன்றிய நெஞ்சினை உடையவள். தலைவியின் களவொழுக்கத்தில் தலைவனுக்குக் குறியிடங்கூறியும் குறியிடம் பெயர்த்தும் வரைவு கடாவியும் தாய்க்கு அறத்தொடு நின்றும் இல் வாழ்க்கையில் துணை புரிந்தும் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியை ஆற்றுவித்தும் வாழ்கின்றாள். தலைவியினுடைய செயல்கள் யாவும் அவள் அறிந்தனவே. தன்னலம் சிறிதுமின்றித் தலைவன் தலைவியர் இருவரது நலத்தை மட்டும் கருதிப் பலவகை இடுக்கண்களுக்கிடையும் சதுர்படச் செயல் புரிந்து வாழும் தோழியினது வரலாறு மிக்க வியப்பைத் தருவது. தலைவிக்கும் தோழிக்கும் இடையே உள்ள நட்புரிமை தலைவனுக்கும் பாங்கனுக்கும் இடையேயும் காண்டலரிது. தொல்காப்பியர்தோழியை, “ஒன்றித் தோன்றும் தோழி” என்கின்றார்.

     இதுகாறும் அகப் பொருள் நெறி ஒருவாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டது.

    இந்நூல் செய்யுட்களில் காணப்படும் சில உபகாரிகளைப் பற்றியும் சில இடங்களைப் பற்றியும் உள்ள செய்திகள் வருமாறு:

  

    அகுதை:இவன் வீ்ரர்களோடு வீரபானம் செய்து மகிழ்ந்து வாழ்பவன். தன்பாற் பாடிவரும் அகவல் மகளிருக்குப் பிடியைப் பரிசில் தருபவன்.

    அஞ்சி: குறைவின்றி ஈபவன்; யானை, தேர் முதலிய படைகளை உடையவன்; போர் செய்தலில் சிறந்தவன்.

    அதிகன்: பசும்பூட் பாண்டியனது படைக்குத் தலைவன்; நடுநிலைமையோடு போர் செய்தவன்; கொங்கரோடு வாகைப் பறந்தலையிற் போர் செய்து பட்டவன்.

    அருமன்: “ஆதியருமன்” என்று கூறப்படுகின்றான். மூதூரென்னும் ஊரில் வாழ்ந்தவன்.

    அழிசி: சேந்தன் என்பவனுடைய தந்தை. வீரபானத்தைச் செய்து விலங்கினங்களை வேட்டையாடும் தன்மையை உடைய வாள் வீரர்கள் பலருக்குத் தலைவன். யானைப் படைகளை உடையவன். ஆர்க்காடென்னும் ஊரை உடையவன்.

    ஆய்: பொதியில் மலைக்குத் தலைவன்; கழலுந்தொடியை அணிந்திருப்பவன்.

    எவ்வி: இசை வல்லார்களைப் பாதுகாக்கும் இயல்புடையவன்; வேளிர்களுள் ஒருவன்; பாணர்களுக்குப் பொற்பூவைப் பரிசிலாக