குறுந்தொகை


lxxxiii


வழங்கியவன். இவனது பிரிவினால் பாணர் மிக்க வருத்தத்தை அடைந்தனர்.

    எழினி: கடையேழு வள்ளல்களில் ஒருவன். பகைவர் கொண்டு சென்ற தன் பசு நிரையை மீட்டவன்.

    ஓரி: வள்ளல்களில் ஒருவன். பல இலக்குகளை ஒரே சமயத்தில் ஊடுருவித் துளைக்கும் வல் வில்லையும் திண்ணிய தேரையும் உடையவன். இவனுக்குரியனவாக ஒரு கானமும் கொல்லி மலையும் கூறப்படுகின்றன.

    கட்டி: வல்வேற் கட்டியென்று பாராட்டப்படுகின்றான். இவன் ஒரு நாட்டிற்குத் தலைவன்.

    குட்டுவன்: மேல் கடற்கரையில் இருந்த மரந்தை என்னும் நகரத்திற்குரிய சிற்றரசன்.

    கொங்கர்: பசும்பூட் பாண்டியனுக்குப் பகைவர்; வாகைப் பறந்தலையில் அதிகனை வென்றவர்.

    கோசர்: நாலூர்க்கோசர் என்று வழங்கப்படுவர். இவர் பழையதோர் ஆல மரத்தடியில் சபை கூடிப் பல அரசியல் காரியங்களை ஆராய்ந்தனர். இவர் வன்கட் சூழ்ச்சியையும் பொய்யாத வாய்மொழியையும் உடையவர். நன்னனென்னும் அரசன்பாற் பகையுடையார்.

    சேந்தன:் அழிசியென்பவனுடைய மைந்தன்; “ஏந்து கோட்டியானைச் சேந்தன்” என்று பரணராற் சிறப்பிக்கப் பெறுகின்றான்.

    தொண்டையர்: தொண்டை நாட்டுக்குரியவர். கல்லாடனார் என்னும் புலவர் இவரைப் பாராட்டுகின்றார். தேர்ப்படையையும் யானைப் படையையும் உடையவர்.

    நள்ளி: காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவராற் பாராட்டப்படுகின்றான்; திண்ணிய தேரை உடையவன். இவனுக்குரியதாகிய காடொன்றில் பல பசுக்களை உடைய இடையர் வாழ்ந்திருந்தனர்.

    நன்னன் : இவனுக்குரிய காவல் மரமாகிய மாவைக் கோசர் என்பார் வெட்டி விட்டு இவனது நாட்டிற் புக்கனர். தன் காவல் மரத்துக் கனியைத் தின்றதற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்தமையால் பரணரால் இகழப்படுகின்றான்.

    பசும்பூட் பாண்டியன் : அதிகமானைத் தன் படைத் தலைவனாகப் பெற்றவன்; கொங்கருக்குப் பகைவன்.