குறுந்தொகை


lxxxiv


    பாரி : ஏழு வள்ளல்களில் ஒருவன்; இவன் மலை பறம்பென்பது.

    பூழியர் : பூழி நாட்டினர்; வெள்ளாட்டுத் தொகுதிகளை உடையவர்.

    பொறையன் : பரணராற் பாடப் பெறுபவன். கொல்லி மலை சில காலம் இவனுடையதாக இருந்தது. குட கடற்கரையில் உள்ள தொண்டி என்னும் பட்டினத்திற்கு உரியவன்.

    மலையன் : மலையமான் திருமுடிக்காரி என்னும் வள்ளல். கபிலரால் பாராட்டப் பெறுபவன். போரில் வெற்றி பெறும் ஆற்றலையும் வேல் விளங்கும் தடக்கையையும் உடையவன். அரசர்களுக்குப் போரில் துணையாகச் செல்பவன். முள்ளூர்க் கானத்துக்குத் தலைவன்.

    வடுகர் : ஒரு சாதியினர்; கஞ்சங் குல்லையைத் தொடுத்துக் கண்ணியாக அணிபவர். இவர்களுடைய நாடு கட்டியின் நாட்டின் எல்லையில் உள்ளது.

    விச்சிக்கோ : விச்சியர் என்னும் குலத்தில் பிறந்தவன்; வில்கெழு தானையை உடையவன். இவன் வேந்தரொடு குறும்பூரிற் பொருத செய்தி பரணரால் சொல்லப்படுகின்றது.

    வேளிர் : கீழ் கடற்கரையதாகிய குன்றூரென்னும் ஊரில் பண்டைக் காலம் தொடங்கி வாழ்ந்து வரும் ஒருவகை வேளிர் கூறப்படுகின்றனர்.


மலைகள்

    அரலைக் குன்றம் : இப் பெயர் ஒரு குன்றத்துக்குரியது போலும்.

    இமயம் : “பேரிசை இமயம்” எனச் சிறப்பிக்கப் பெறும்.

    ஏழில் : இக்குன்றத்தைப் பற்றிக் கொல்லன் அழிசியென்னும் புலவர் கூறுகின்றார்.

    கொல்லி : இம்மலை பரணரால் பொறையனுக்குரியதாகவும் கபிலரால் வல்வில் ஓரிக்குரியதாகவும் கூறப்படுகின்றது. அவ்விருவராலும் இதன்கண் உள்ளதும் தெய்வத்தால் எழுதப் பெற்றதுமாகிய கொல்லிப் பாவையைப் பற்றிய செய்திகள் சொல்லப்படுகின்றன.

    பறம்பு : பாரியென்னும் வள்ளலுக்கு உரியது. இங்கே உள்ள சுனையின் நீர் தை மாதத்தில் மிக்க குளிர்ச்சி உடையதாக இருக்கும்.