பொதியில் : பொதியில் வளப்பமுழுதும் அறிந்தார் யாவரும் இலராதலின் இதனை, “மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியில்” என்று ஒரு புலவர் பாடுகின்றார். ஆய் என்பவனுக்கு உரியதாக இது சொல்லப்படுகின்றது. இம் மலையில் உண்டாகும் காந்தளும் வேங்கையும் சந்தனமும் புலவர்களது பாராட்டைப் பெற்றனவாகும்.
ஆறுகள்
காவிரி: உறையூர்க் காவிரித் துறையைப் பற்றிப் பரணர் பாடுகின்றார். அத் துறையில் மருத மரங்கள் இருத்தலையும் அம் மரங்களில் யானைகள் கட்டப்பட்டிருத்தலையும் அவர் சொல்லி உள்ளார்.
சோணை: பாடலிபுத்திர நகரத்தில் உள்ள ஒரு நதி. இதன்கண் யானைகள் நீராடும் செய்தியை ஒரு செய்யுள் கூறுகிறது.
காடு
மலையமானுக்குரிய முள்ளூர்க்கானம் இரண்டு செய்யுட்களிலும் வல்வில் ஓரிக்குரிய கானமொன்று ஒரு செய்யுளிலும் கூறப்படுகின்றன.
ஊர்கள்
ஆர்க்காடு: சோழ நாட்டில் உள்ளது; அழிசி என்பவனுக்கு உரியது. ஆர்க்காட்டுக் கூற்றமென்றதொரு பெயர் சாஸனங்களால் அறியப்படுகின்றது.
உறையூர்: காவிரிக்கு அருகில் சோழர்களுடைய இராசதானியாக விளங்கியது. உறந்தை எனவும் வழங்கும்.
குறும்பூர்: விச்சிக்கோ என்பவன் அரசரோடு பொருத இடம்; பரணரால் குறிப்பிக்கப்படுகிறது.
குன்றூர்: கீழ் கடற்கரையிலுள்ள ஒரு நகரம்; இதன்கண் நெடுங்காலமாகச் சில வேளிர் வாழ்ந்து வந்தனர்.
தொண்டி: மேல் கடற்கரைக் கண்ணதாகிய தொண்டி ஒன்று பரணரால் குறிக்கப்படுகின்றது. அது பொறையனுக்குரியது. நெல் வளம் மிக்க தொண்டியொன்று வேறிரண்டு புலவர்களால் பாராட்டப் பெறுகின்றது. அது கீழ் கடற்கரைக் கண்ணதென்று தெரிய வருகின்றது.
பாடலி: “பொன்மலி பாடலி” என்று சிறப்பிக்கப் பெறும். சோணை நதியின் கரையில் இருப்பதாகக் கூறப்படும் பாடலிபுத்திரம் என்பதும் இதுவே.