மரந்தை: மரந்தை என்னும் பாடமுண்டு; கடற்கரைக் கண்ணது; குட்டுவனுக்கு உரியது.
முள்ளுர் : மலையமானுக்குரியது; இதனைச் சார்ந்த காடொன்று புலவரால் புகழப் பெற்றது.
வாகைப் பறந்தலை: அதிகமானுக்கும் கொங்கருக்கும் போர் நடந்த இடம்; பரணர் இதனைக் குறித்துப் பாடுகின்றார்.
பண்டைக் காலத்து மக்கள் வாழ்க்கை நிலை
இந்நூல் செய்யுட்களில் புலவர்கள் சார்த்துவகையாலும் உரிப் பொருளுக்கு உபகாரப்படும் வகையாலும் உணர்த்துகின்ற பல செய்திகள் அக் காலத்துத் தமிழ் மக்களுக்குரிய வழக்கங்கள், வாழ்க்கை நிலை, நாகரிகம், அரசியல் முதலியவற்றை ஒருவாறு அறிந்து கொள்ளுவதற்குக் கருவியாக இருக்கின்றன.
அரசியல்
அரசன் செங்கோல் செலுத்தும் இயல்பினனாக இருந்தான். நிலப்பரப்பு நாடு, ஊர், சேரி, குடி என்னும் பிரிவுகளை உடையதாக இருந்தது. மொழியின் வரையறையினால் தேசங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. தமிழ் வழங்காத பிற நாட்டை மொழிபெயர் தேசம் என்று குறிக்கின்றனர். வடுகர் முனையதாகிய ஆந்திரர் நாடு அங்ஙனமே இந்நூலில் குறிக்கப்படுகின்றது. அரசனது நீதி நெறியை முறையென்பர். இளையனாகிய அரசன் பகைவர் சூழ்ச்சியால் இடுக்கண்ணுற்றுப் பின் நட்பாளருடைய உதவியால் அரசுரிமையைப் பெறுவதும் அங்ஙனம் பெற்ற காலத்தில் தன் நட்பாளர் செய்த நன்றியை மறவாதிருத்தலும் பழைய வழக்கு. இதனைக் கபிலர் ஒரு பாட்டில் மறை முகத்தால் குறிக்கின்றார் (225).
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் குடி மக்கள் குறைகளைக் கேட்டு அறம் வழங்கினான். அங்ஙனம் வழங்கும் பொருட்டு அவனுக்கு உதவி புரிய அறங்கூறவையம் என்னும் நியாய சபை இருந்தது. அது பல சான்றோர்களைத் தன்பாற் கொண்டது. வழக்குடையார் அங்கே வந்து வெளிப்படையாகத் தமக்கு உண்டாகிய துன்பங்களைக் கூறுவர். தன்பாற் காதலுடைய தலைவியைப் பெறாத தலைவன் அறங்கூற வையத்தே தன் உரிமையை நிலை நாட்டுதல் வழக்கம்.
குற்றம் செய்தாரை அரசன் ஒறுத்தான். குற்றம் செய்தார் தம் நிறையளவு பொன்னைச் செலுத்தலும் யானைகளைத் தருதலும் தண்டனை வகைகளில் சில. கொலைத் தண்டனையும் சிறுபான்மை அக் காலத்தில் இருந்தது. ஆராயாது கொலைத்