குறுந்தொகை


lxxxviii


இருக்கும். அதனை “ஆசிறெரு” என்று ஒரு புலவர் குறிக்கின்றார். பலர் கூடிக் கடவுளை வணங்கியும் பல செய்திகளைப் பேசியும் தங்குவதற்குரிய மன்றங்கள் ஊரின்கண் இருந்தன. ஊரார் நீர் உண்ணுதற்கும், ஆடுவதற்கும் ஆறில்லாத இடங்களில் ஊருக்குஅண்மையில் பொய்கைகள் இருந்தன. சில இடங்களில் கேணிகள் இருந்தன. ஊருக்கு அணித்தாகப் பொய்கையும் அதற்கு அப்பால் சிறிது தூரத்தே கான்யாறும் இருப்பதாக ஒரு செய்யுள் கூறும். “யாம் எம் மயிருக்கு மண் தடவி நீராடற்கு அக்கான்யாற்றுக்கு வருவேம்” என்று ஒருத்தி கூறுகின்றாள். இதனால் ஊராரால் உண்ணப்படும் நீர் பொய்கையில் இருத்தலின் அதன்கண் நீராடல் பிழை என்று அவர்கள் எண்ணியிருந்தமை புலப்படும்.

  
அறம்

     எல்லாச் சாதியினரும் விருந்தோம்புதலையே சிறந்த கடப்பாடாகக் கொண்டிருந்தனர். அந்தணருக்கு நீரோடு பொன் சொரியும் வழக்கமும் இருந்தது. வருபவர்களுக்கு வரையறை இன்றி உணவிடுதல் குடிமக்களுடைய இயல்பு. இராக் காலத்தில், “புறத்தே யாரேனும் உள்ளீரோ?” என்று வினாவி யாவரையும் அழைத்து உண்பிப்பர். ஈதலாகிய பேரறத்தை அக்கால மக்கள் பெரிய கடைப்பிடியாக மேற்கொண்டனர். இரவலர் வாரா நாளைப் பயனற்ற நாளாகக் கருதினர். ஒருவன் சபதம் செய்கையில், “இரவலர் வாரா நாட்கள் பல எனக்கு உண்டாகுக!” என்கின்றான்.

  
பொருள்

    பொருளை அறத்தின் பொருட்டுத் தேடுதலே பண்டைப் பெரியோர் கருத்து. தம் முன்னோர்கள் ஈட்டி வைத்த செல்வத்தைச் செலவழித்தல் பிழை என்ற கொள்கையும், அந்தச் செல்வத்தை உடையவனைச் செல்வனாகக் கொள்ளல் கூடாதென்ற கொள்கையும்,

  
“உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்” 

என்ற அடியால் விளங்குகின்றன. பொருளீட்டும் முயற்சியைச் செய்யாமல் வறியனாக இருத்தல் யாசகம் செய்தலினும் இழிவாகக் கருதப்பட்டது. தான் அரிதின் முயன்று ஈட்டிய பொருளால், தான் இன்புறுவதோடமையாமல் தன்பால் வந்த இரவலருக்கும் ஈந்து உபகரித்து வந்தான் இல்வாழ்வான். தம்மில்லில் இருந்து தம்மால் ஈட்டப்பட்ட பொருளால் அறத்தைச் செய்து இன்பத்தை நுகரும் அவ்வாழ்க்கையின் இனிமை மிகவும் பெரியது என்பது முன்னோர்களின் கொள்கை.

    உணவு, உடை ஆகியவற்றில் மிக எளிய அமைப்பை உடைய இல்லறத்தானுக்குப் பெரு நிதி வேண்டுவதில்லை.